கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கான படகுக் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.


கட்டணம் உயர்வு:


இதுதொடர்பாக  பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளூர் சிலைக்கு இயக்கப்படும் படகிற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  சாதாரண கட்டணம் ரூ.50 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.75ஆகவும், சிறப்பு கட்டணம் ரூ.200 ஆக இருந்த நிலையில், புதிய கட்டணம் ரூ.300ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.  தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான சுற்றுலா படகுக் கட்டணம் ரூ.25-லிருந்து 30 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


சுற்றுலா பயணிகளை கவரும் கன்னியாகுமரி:


சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினந்தோறும் அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் குவிவது வழக்கம். உள்ளூர், அண்டை மாவட்ட மற்றும் மாநில மக்கள் மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் இங்கு வந்து இயற்கை அழகை ரசித்து செல்வது வழக்கம். கேரளா மாநிலத்திற்கு அருகாமையில் அமைந்திருப்பதும், கன்னியாகுமரிக்கு அதிகப்படியான சுற்றுலாபயணிகள் வந்து செல்வதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.  வழக்கமாகவே இங்கு அதிக அலவில் சுற்றுலாபயணிகள் காணப்பட்டாலும், விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்படும்.


இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை காணவும், கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர  திருவள்ளுவர் சிலையை காணவும் அதிக ஆர்வம் காட்டுவர்.  அந்த பகுதிகளுக்கு செல்ல  படகு சவாரி மட்டுமே ஒரே வழி. கடலில் பயணம் செய்து அந்த பகுதிகளை பார்வையிட சுற்றுலா பயணிகளும் அதிக ஆர்வம் கட்டி வருகின்றனர். அந்த சேவையை வழங்கி வந்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், தற்போது சுற்றுலாபயணிகளுக்கான படகு சவாரி கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.