பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் எந்த ஊரிலும் ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு எதுவும் ஏற்படல்லை என, பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், ”பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் காரணமாக தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் பால் விநியோகத்தில் தடை ஏற்படவில்லை. எதிர்கட்சியினர் தூண்டுதல் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பால் விநியோகம் சீராக நடைபெறுகிறது.  அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிர்கட்சியினர் தூண்டுதலின் பேரில் ஒருசில சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்” என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.


பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள், ஆவின் நிர்வாகத்திற்கு பால் வழங்க மறுத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை:


தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் ஆவின்  நிறுவனத்தால்  கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு, கொள்முதல் விலையை லிட்டருக்கு  7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியது. அவ்வாறு உயர்த்தாத பட்சத்தில் வெள்ளிக்கிழமை முதல் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் அறிவித்திருந்தார்.


பேச்சுவார்த்தை தோல்வி:


அதனை தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.  இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டப்படி முதல் பால் விநியோக நிறுத்த போராட்டம் தொடரும் என கூறினார்.


”யானைப்பசிக்கு சோளப்பொறி”


தொடர்ந்து பேசிய ராஜேந்திரன், ”பால் கொள்முதல் விலை உயர்வு, பணியாளர்களின் பணி வரன்முறை, கால்நடை தீவனம், கால்நடைகளுக்கான காப்பீடு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக அரசு எங்களது  கோரிக்கைகள் மீது தீர்வு ஏற்படுத்தி தருவதாக உத்தரவாதம் அளித்தது. அதன்படி,  பசும்பால் லிட்டருக்கு ரூ.32-ல் இருந்து ரூ.35 ஆகவும், எருமை பால் ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆகவும் உயர்த்தப்பட்டது. 


இந்த விலை உயர்வு 'யானைப்பசிக்கு சோளப்பொறி' போன்றதாக உள்ளது. விலை உயர்வு போதாது என்று அப்போதே தமிழக அரசுக்கு தெரியப்படுத்தினோம். குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரும்படி கேட்டோம். அதே வேளையில் மற்ற கோரிக்கைகள் மீது எந்த தீர்வும் காணப்படவில்லை.  எனவே, ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதன்மூலம் தமிழகத்தில் இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஆவினுக்கு வெள்ளிக்கிழமை முதல் பால் அனுப்ப மாட்டோம். 


10 லட்சம் லிட்டர் பால் தட்டுப்பாடு?


 தமிழகத்தில் உள்ள 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆவினுக்கு நாள் ஒன்றுக்கு 27½ லட்சம் லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. இதில் 2½ லட்சம் லிட்டர் பால், நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் நிறுவனத்தின் மூலம் நுகர்வோருக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த போராட்டத்தின் மூலம் காலை மற்றும் மாலையில் தலா 50 ஆயிரம் லிட்டர் என்ற வகையில் தொடர்ந்து குறைந்து கொண்டே வரும். தொடர்ந்து 5 நாட்களில் ஆவினுக்கு 10 லட்சம் லிட்டர் வரை பால் வழங்குவது குறையும். ஒரு கட்டத்தில் ஆவினுக்கு பால் கொள்முதல் முற்றிலும் தடைபடும். தனியார் நிறுவனத்துக்கு கொடுப்போம் தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே உள்ள விலையில் 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து பாலை கொள்முதல் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள். 


 இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பால் உபரி என்பது இல்லை. இதனால், நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் எங்கிருந்தும் பால் வாங்க முடியாது. தமிழக அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படும்” என ராஜேந்திரன் கூறினார்.