கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் பூட்டி வைத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொலை செய்த பெண்ணின் வீட்டை சூரையாடிய ஊர் பொதுமக்களால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜான் ரிச்சார்ட். இவர் தற்போது வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது மனைவி சகாய சில்ஜா தனது மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள் ஆகியோருடன் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றார்.
இந்நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி நேற்று மதியம் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த போது, திடீரென மாயமானார். உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி சிறுவன் கிடைக்காத நிலையில் தாயார் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சிறுவன் மாயமான நேரத்தில் கழுத்து மற்றும் கையில் தங்க நகைகள் அணிந்திருந்ததால் நகைக்காக கடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா என்ற பெண் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால், அவர் மீது சந்தேகமடைந்த காவல்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதற்கிடையே இந்த தகவல் காட்டு தீயாக ஊருக்குள் பரவ சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாத்திமா வீட்டை அடித்து நொறுக்கி சூரையாடினர். அப்போது அங்கிருந்த பீரோவை உடைத்து பார்த்தபோது, அதில் அந்த சிறுவன் வாய்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைக்கேட்டு, அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பாத்திமாவின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு அவரை உடனடியாக கைது செய்ய கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். நகைக்காக சிறுவனை கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்