காஞ்சிபுரம் மாவட்டம் கலியனூர் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான பெண். செங்கல்பட்டில் உள்ள செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். செங்கல்பட்டில் சக ஊழியர்களுடன், வீடு எடுத்து தனியாக வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த திண்டிவனத்தை சேர்ந்த ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நட்பு காதலாக மாறியது
இருவரும் ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அது காதலாக மாறியுள்ளது. சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் பல்வேறு இடங்களில், இருவரும் ஒன்றாக சுற்றி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இருவரின் காதல் அடையாளமாக அப்பெண் கர்ப்பம் தரித்துள்ளார். இளைஞர் அப்பெணை திருமணம் செய்து கொள்ளமாட்டார் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காஞ்சிபுரத்தில் இருந்த அப்பெண் திடீரென தனக்கு வயிற்று வலி ஏற்படுவதாக, தனது அக்கா கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
குழந்தை பிறந்ததால் மன உளைச்சல்
தொடர்ந்து அப்பெண் குழந்தை பெற்றதால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனை அடுத்து அவரது தாயும் மருத்துவமனை வந்து திட்டி தீர்த்து உள்ளனர். இந்தநிலையில் நேற்று நள்ளிரவு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து தப்பி சென்ற அப்பெண், குழந்தையை கலியனுர் பகுதியில் பாழடைந்த கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.
சிசிடிவி காட்சிகள்
இந்தநிலையில் காலை வந்து பார்த்த மருத்துவர்கள் தாய் மற்றும் சேய் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து காஞ்சிபுரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், தாய் குழந்தையை கொண்டு சென்றது தெரியவந்தது.
முகவரிக்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது தாய் மாயமானதும் சந்தேகம் ஏற்பட்ட போலீசார், விசாரணையின் முடிவில் மாயமான அப்பெண்ணை கண்டுபிடித்தனர். அப்பெண்ணிடம் குழந்தை எங்கே என்று கேட்டபோது முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் மன உளைச்சலில் குழந்தையை கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டார்.
பரபரப்பு உண்மைகள்
இது தொடர்பாக அப்பெண்ணை கைது செய்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பெண்ணின் காதலனிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. தாய் தனது குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. காதலிப்பது என்பது எந்த விதத்திலும் தவறு கிடையாது, சரியான நபரை காதலிக்க வேண்டும். காதலனிடம் பெண்கள் எல்லை மீறாமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் இது போன்று சோகமான முடிவை தான் தரும். சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை பொறுத்தவரை இரவில் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவ்வப்போது குழந்தை காணாமல் போவது, தொடர்கதையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.