முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் விசாரணைக்கு எனக் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு நேற்றோடு முப்பது ஆண்டுகள் ஆனது. இந்த நிலையில் பேரறிவாளனின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் நேற்று ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் #31yearsOfInjustice என்கிற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வழக்கில் விரைந்து விடுதலை வேண்டித் தங்களது ஆதரவுக்குரலை எழுப்பினார்கள்.
சினிமாத்துறையிலிருந்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் இதுகுறித்து பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அற்புதம் அம்மாளுக்கு ஆதரவாக நடிகரும் மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அதில், ‘மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரறிவாளனுக்கு ஆதரவாக ட்விட்டர் பேஸ்புக் பிரசாரம்:
நேற்று லோகேஷ் கனகராஜ் பதிவு செய்திருந்த ட்வீட்டில் #31YearsOfInjustice #StandWithArputhamAmmal எனப் பதிவு செய்திருந்தார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ட்வீட்டில் ’இந்தத் தாயின் 31 ஆண்டுகாலப் போராட்டத்துக்கான நீதியைப் பெற்றுத்தரும் நேரம் வந்துவிட்டது’ எனப் பதிவிட்டிருந்தார்.
இயக்குநர் வெற்றிமாறன் தனது பேஸ்புக்கில், 31 ஆண்டுகால அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனப் பதிவிட்டிருந்தார்.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், 'இந்த அநீதி இழைக்கப்பட்டு 31 ஆண்டுகள் ஆகிவிட்டது.ஆனால் இன்னும் நீதி கிடைத்தபாடில்லை. எல்லோரும் ஒன்றிணைந்து நீதிக்காக குரலெழுப்புவோம்.ஜெய்ஹிந்த்’ எனப் பதிவிட்டிருந்தார்.
சிறைகளில் கொரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read: 31 ஆண்டுகளாக சிறையில் பேரறிவாளன்.. அற்புதம்மாளுக்கு ஆதரவாக களமிறங்கிய சினிமா இயக்குநர்கள்!