தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அந்த பதவிக்கு யார் வருவது என்ற ரேஸ் தொடங்கிவிட்டது. யாருக்கு வாய்ப்பு.? பார்க்கலாம்.
பதவி நிறைவடையும் மாநிலங்களவை எம்.பி-க்கள் யார் யார்.?
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை எம்.பி-க்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், M.M. அப்துல்லா மற்றும் திமுக கூட்டணியைச் சேர்ந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகர், அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், அந்த இடத்தை பிடிக்க இப்போதே போட்டி தொடங்கிவிட்டது.
திமுகவில் வைகோ அவுட்.. கமல்ஹாசன் இன்.?
திமுகவை பொறுத்தவரை, மூத்த வழக்கறிஞர் வில்சன் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டுவருவதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. இதேபோல், திமுக தலைமையிடம், குறிப்பாக உதயநிதியிடம் நற்பெயரை பெற்றுள்ளதாலும், சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும், M.M. அப்துல்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
வைகோவை பொறுத்தவரை, 2024 மக்களவை தேர்தலின்போது, எப்படியாவது ஒரு சீட் கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில், மாநிலங்களவை எம்.பி குறித்து திமுகவிடம் எந்த ஒப்பந்தமும் போடவில்லை. அதனால் இந்த முறை மாநிலங்களவை எம்.பி ஆகும் வாய்ப்பு அவருக்கு இல்லை. அந்த இடத்தை தற்போது கமல்ஹாசன் பிடிப்பார் என தெரிகிறது. ஏனென்றால், வைகோவிற்கு நேர்மாறாக, மக்களவை தேர்தலில் சீட் வாங்குவதற்கு பதிலாக, மாநிலங்களவை எம்.பி-க்கான ஒப்பந்தத்தை, மக்கள் நீதி மய்யம் சார்பாக, திமுகவிடம் போட்டார் கமல்ஹாசன். அதனால், அவருக்கு தற்போது பதவி உறுதியாகிறது.
மொத்தம் 4 மாநிலங்களவை எம்.பி-க்களை கொண்ட திமுகவில், மீதமுள்ள ஒரு இடத்திற்கான போட்டி, காங்கிரஸ் மற்றும் தொமுச இடையே நிலவுகிறது. இதற்காக காங்கிரஸ் சார்ப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுவருவதாக தெரிகிறது. எனினும், ஒவ்வொரு முறையும் தொமுச-விற்கு ஒரு இடத்தை வழங்கிவரும் திமுக, இந்த முறையும் அப்படியே வழங்கலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுகவில் யார் யாருக்கு வாய்ப்பு.?
அதிமுக சார்பாக, இந்த முறை 2 மாநிலங்களவை எம்.பி-க்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஏனென்றால், அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி-யாக இருந்த தர்மர், தற்போது ஓபிஎஸ் அணியில் இருக்கிறார். இதேபோல், அதிமுக கூட்டணி சார்பில் பதவியில் இருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தற்போது பாஜக கூட்டணியில் உள்ளார். இதனால், அதிமுக சார்பில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளது.
இந்த ரேஸில், தேமுதிகவும் உள்ளது. ஏனென்றால், 2024 மக்களவைத் தேர்தலின்போதே, மாநிலங்களவை சீட்டை தங்களுக்கு வழங்க அதிமுக உறுதியளித்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். இந்த சூழலில், தேமுதிகவில் யார் மாநிலங்களவை எம்.பி ஆவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த பதவிக்காக பிரேமலதாவின் சகோதரரும், கட்சியின் மாநில துணைச் செயலாளருமான எல்.கே. சுதீஷ் 15 வருடங்களுக்கும் மேலாக காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இளம் தலைமுறையை ஊக்குவிக்கும் வகையில், விஜய பிரபாகரனுக்கு பதவி வழங்கப்படலாம் என்றும் ஒரு பேச்சு உள்ளது.
மற்றொரு இடத்தை, தென் மாவட்டங்களை வலுப்படுத்தும் வகையில், அந்த பகுதியை சேர்ந்த ஒருவருக்கு அதிமுக வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை எம்.பி-யை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்த முறை நடக்கும் மாநிலங்களவை எம்.பி தேர்தல், திமுக, அதிமுக கூட்டணியில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.