விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் கட்டும் பணியில் ஈடுபட்ட 8ஆம் வகுப்பு படிக்கும்  13 வயது தினேஷ் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது போன்ற செயல்களில் இருந்து அனைத்து கட்சிகளும் விடுபட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 


இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், ”கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது. கொடிக்கம்பங்களும், பேனர்களும், அலங்கார வளைவுகளும் தொடர்ந்து உயிர்களைக் காவுவாங்குகின்றன. இந்தக் கீழ்மையில் இருந்து அனைத்துக் கட்சிகளுமே விடுபட வேண்டும்.” என பதிவிட்டுள்ளார். 






விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா நடைப்பெற்றது. இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள் அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் பணிகளில் 10 க்கும் மேற்ப்பட்டவர்கள் ஈடுபட்டு இருந்தனர்.


அதில் விழுப்புரம் ரஹீம் லே- அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயதே ஆன தினேஷ் என்ற சிறுவனும் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அச்சாலையில் மின் பகிர்மான கழகம் செயல்ப்பட்டு வருவதால் அங்கு அதிக அளவிலான உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. அப்போது பணியில் ஈடுப்பட்டு இருந்த சிறுவன் நடவு செய்த கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உராசியதால் மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் தூக்கி வீசப்பட்டான்.


படுகாயம் அடைந்த சிறுவனை உடன் பணி புரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது, சனிக்கிழமை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.




கடந்த காலத்தில் ஃப்ளெக்ஸ் பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களால் ஏற்பட்ட விபத்துகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் நிகழ்ச்சிகளில் ஆடம்பரத்தை தவிர்க்குமாறு  கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தார். 2019 ஆம் ஆண்டில், சென்னையில் அதிமுக ஃப்ளெக்ஸ் பேனர் மோதியதில் ஒரு இளம் பெண் சுபஸ்ரீ தனது ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து இறந்தார். சுபஸ்ரீ இறந்தபோது அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், விழுப்புரம் சிறுவனுக்கு மெளனம் காப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.