கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள் மற்றும் செயற்குழு, நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கமல்ஹாசன் ”ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது என்கிறார்கள். ஜனநாயகம் ஒரு பிள்ளை வளர்ப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். குறுக்கு வழி கண்டுபிடிக்கவே பலரும் முயற்சி செய்கிறார்கள். பூட்டு தயாரிக்கும் போதே சாவியையும் கண்டுபிடிக்கிறார்கள்.
மக்களை மிரட்டி வாழும் எந்த அரசும் பிரிட்டிஷ் அரசாக இருந்தாலும் எந்த அரசாக இருந்தாலும் என்னை மாதிரி ஆட்கள் பயப்படமாட்டார்கள். கர்நாடக தேர்தலில் பணியாற்றுமாறு என்னிடம் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். அதற்கு முன்னதாக கர்நாடக தலைமை காங்கிரசில் இருந்து கடிதம் வந்தது. அவர்கள் வெற்றிக்கு ஒத்துழைப்பு கொடுப்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும்.




திராவிடம் என்றால் 2 கட்சிகள் என்கிறார்கள். திராவிடம் நாடு தழுவியது என்கிறோம் நாம். தலைமை பொறுப்பு என்பது மேடை ஏறி பேசுவது மட்டுமல்ல. ஒவ்வொரு சின்ன தொகுதிக்கும் கட்சிக்கு 6000 பேர் வேண்டும். புது கட்சி ஆரம்பித்தால் எவ்வளவு வேகமாக வேலை செய்வீர்களோ, அவ்வளவு வேகமாக செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்படாத இடங்கள் அணைத்தும் பூர்த்தி செய்ய வேண்டும். உங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தான் பொறுப்பும் அங்கீகாரமும் வழங்கப்படும். குறை கூறுவதை மட்டுமே வைத்திருப்பவர்களுக்கு செவி சாய்க்க மாட்டேன். ஆக்கபூர்வமான செயல்களுக்கு மட்டுமே செவி சாய்ப்பேன். 


நம் மீது மக்கள் வைத்திற்கும் நம்பிக்கை ஈரோட்டிலும் தெரிந்தது. தேர்தல் கூட்டணி குறித்து எல்லாம், இப்போது பேச வேண்டாம். அதற்கு நேரம் இன்னும் இருக்கிறது. என் வீட்டில் குளியல் அறைக்கும், பாத்ரூமுக்கும் தான் கதவு இருக்கும். திறந்த கதவு தான் என் வீடு. மற்றவர்களுக்கு தேவைப்படுவதை பதுக்கி வைத்தால் அங்கு பூட்டு வேண்டும். மற்றவர்களுக்கு நல்ல பண்புகளை கொடுக்கும் வீட்டுளுக்கு பூட்டு தேவை இல்லை. கர்நாடக தேர்தல் அழைப்புகளுக்கான முடிவை பின்னர் எடுப்பேன். இறையான்மைக்கு ஆபத்து என்று யார் அழைத்தாலும் செல்வேன். எனக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும், நீங்கள் சாமி கும்பிடும் உரிமையை பறித்தால் குரல் கொடுப்பேன். நீங்கள் செய்யும் வேலை தான் நான் எடுக்கும் முடிவுகளை முடிவு செய்யும். நான் 2024 க்கு என்ன நல்ல முடிவு எடுக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ. அதற்கு இப்போதே வியர்வை சிந்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.




நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு கமல்ஹாசன் பேட்டியளித்தார். அப்போது நாடாளுமன்ற கோவையில் போட்டியா? கூட்டணியா? தனித்துப் போட்டியா? என்ற கேள்விக்கு, ”இதுகுறித்து முடிவெடுக்க இங்கு கூட்டம் கூடி இருக்கிறோம். இன்னும் முடிவு எடுக்கவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்படும். பெங்களூரு பிரச்சாரத்திற்கு செல்வது குறித்து நாளைக்குள் முடிவு சொல்லப்படும். இது நாங்கள் பேசுவதற்கான கூட்டம். என்ன பேசி இருக்கிறோம் என்பது ரகசியம். முடிவெடுத்த பின்னர் சொல்லப்படும்” எனத் தெரிவித்தார். சட்டமன்றத்தில் தவறவிட்டதை நாடாளுமன்றத்தில் பெற திட்டமா? என்ற கேள்விக்கு, ”இருக்கலாம். அது நல்ல எண்ணம் தானே” எனத் தெரிவித்தார்.