கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த நிலையில், இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை முன்வைத்து திமுக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் சுமத்தி வருகின்றன.


தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: 


கடந்த 19ஆம் தேதி, கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 56 பேர் உயிரிழந்துவிட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சரும் திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தனர்.


இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். 


"மனநல மையங்களை உருவாக்க வேண்டும்"


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வரம்பை மீறியதையும் அவர்கள் கவனக்குறைவாக இருந்ததையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.


அவர்களுக்கு ஆலோசனை அளிக்கும் மனநல மையங்களை உருவாக்க வேண்டும் என்பதே அரசுக்கு எனது வேண்டுகோள். எப்போதாவது குடிக்கும் பழக்கம் இருக்கலாம். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தங்களின் வாழ்க்கையை பாதிக்காத வகையிலாவது குடிக்க வேண்டும்.






ஆனால், சர்க்கரையாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி வரம்பை மீறுவது மோசமானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.