விஜய்சேதிபதி நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கா பே ரணசிங்கம். வெளிநாட்டில் இறந்த தன்னுடைய கணவனின் உடலை பெறுவதற்கு அரசு அதிகாரிகள் அலைகழிக்கும் சம்பவம் தான் படத்தில் கரு. அதே போன்று நிஜவாழ்கையிலும் பல சம்பவங்கள் நடக்கின்றன. நடக்கும். அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டில் இறந்த மகனின் உடலை வாங்குவதற்கு அரசு அதிகாரிளிடம் மனுஅளித்து வரும் ஒரு தாயின் போராட்டத்திற்கு இன்னும் விடிவு கிடைக்கவில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கூகையூர் கிராமத்தை சேர்ந்த மாலதி-ரங்கசாமி என்ற தம்பதியர்களின் மகன் விக்னேஷ்(24). பொறியாளரான அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள வாஜ் அட்வர்டைசிங் ஏஜென்சி என்ற நிறுவனத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் சம்பளத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். விக்னேஷின் தந்தை ரங்கசாமியும் துபாயில் மாற்று இடத்திற்கு பணி செய்வதற்காக விக்னேஷ் உடன் சென்றுள்ளார்.
இந்தநிலையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பணி செய்து வந்த விக்னேஷ் கடந்த வாரம் ஜூலை 7ஆம் தேதியன்று தனது அறையில் பிணமாக தூக்கில் தொங்கி உள்ளார். அருகில் வேலை செய்து கொண்டிருந்த விக்னேஷின் தந்தை ரங்கசாமி தினந்தோறும் மகனுக்கு போன் செய்வது வழக்கம்,அதுபோல் கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்றும் மகனுக்கு போன் செய்து பார்த்தபோது,மகன் போன் ஆன் செய்யவில்லை ,என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து நீண்ட நேரம் போன் செய்து பார்த்த ரங்கசாமி விக்னேஷின் இருப்பிடத்திற்கு வந்து உள்பக்கம் தாழிட்டிருந்த அவரின் அறையை உடைத்து திறந்து பார்த்தபோது, அங்கு விக்னேஷ் இறந்த நிலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்துள்ளார். இதன்பிறகு தகவலறிந்த சவுதி போலீசார் வந்து இறந்தவரின் உடலை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஒன்றரை வாரமாக விக்னேஷ் உடல் சவுதி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் உள்ளது. விக்னேஷ் பணிபுரிந்த நிறுவனத்தின் முதலாளி டாரிக் அல்காம்டி என்பவர் தன்னால் எந்த வகையிலும் உதவ முடியாது என கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து விக்னேஷின் தந்தை ரங்கசாமி தனது மகனை ஊருக்கு கொண்டு வர வழி தெரியவில்லை என கூகையூரில் உள்ள தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். குடும்பத்தார் தற்போது செய்வதறியாது திகைத்து, விக்னேஷ் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தாய் மாலதி மற்றும் சகோதரர் வெங்கடேஷ், சகோதரி சரஸ்வதி ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஜூலை 8 ஆம் தேதி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு செயலர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு இயக்குனர் ஆணையகம் ஆகியவற்றிற்கும் மனு அளித்துள்ளனர். கடந்த 2 வாரத்திற்கும் மேலாக இறந்துபோன விக்னேஷின் உடல் சொந்த ஊருக்கு வர முடியாமல் சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் கிடப்பதால், இறந்து போன விக்னேஷின் தாய் மாலதி கண்ணீர் மல்க மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து மனுக்கள் அனுப்பி, மகனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
தந்தை ரங்கசாமியும், மகன் சடலம் உள்ள சவுதி அரசு மருத்துவமனையே கதியென இருந்து வருகிறார். மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இறந்துபோன கூகையூர் விக்னேஷின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வேண்டுமென கூகையூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதற்காக தமிழக அரசு வெளிநாட்டிலுள்ள விக்னேஷின் உடலை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்