சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடியில் 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் 13- ஆம் தேதி துவங்கியது. கொரோனா முழு ஊரடங்கிற்கு பின்பு அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் துவங்கி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 5-ஆம் மற்றும் 6-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியை கண்டறியும் வகையிலும் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியவற்றை அறியும் வகையில் 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது அகரம் என்ற இடத்தில் நடத்தப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் டெரகோட்டாவில் செய்யப்பட்ட பெண் சிலையின் தலை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தலை பெண் கடவுள் மீனாட்சி அல்லது வைஷ்ணவர்களின் கடவுளான ஆண்டால் ஆகிய இருவரில் ஒருவரை குறிக்கும் வகையில் இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக பேசிய தமிழ்நாட்டு தொல்லியல்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "இது மிகவும் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. ஏனென்றால் இந்த காலத்தில் அங்கு இது போன்ற தலை வடிவங்கள் மற்றும் சிலைகள் இருந்ததாக இதுவரை கண்டு பிடிக்கப்பட்டதில்லை.
அவை அனைத்தும் இந்த காலத்திற்கு பிறகே வந்திருக்கும் என்று இதுநாள் வரை கருதப்பட்டு வந்தது. அந்த நம்பிக்கையை தற்போது இந்த டெரகோட்டா தலை வடிவம் பொய் ஆக்கியுள்ளது. இந்த வடிவம் டெரகோட்டவில் 2.9*4.7*2.6 சென்டி மீட்டர் அளவில் செய்யப்பட்டுள்ளது" என்று ஆங்கில செய்திதாள் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். இதில் ஒரு பெண் ஆபரணங்கள் அணிந்து கொண்டு இருப்பது போல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக 7-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை முதுமக்கள் தாழியுடன் மனித எலும்பு கூடுகள், மண் பானை, வட்டில் மூடிகள் , சங்கு வளையல்கள், பருகு நீர் குவளை, அகண்ட வாய் கிண்ணம், பகடைகாய்,உழவுவிற்கு பயன்படுத்தும் கல்லால் ஆன கருவி, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் குவளை, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் ஓடு, வட்ட வடிவிலான சுடுமண்ணால் செய்யப்பட்ட வளையம், தங்க ஆபரண கம்பி, சூது பவள மணிகள் உள்ளிட்ட 900-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இவை தவிர 2 முதுமக்கள் தாழியுடன் கூடிய மனித எலும்பு கூடுகள் மற்றும் தரையில் புதைக்கப்பட்ட நிலையில் 7 மனித எலும்பு கூடுகள் கண்டறியபட்டுள்ளன. மேலும் ஒரு முதுமக்கள் தாழியும் அதன் உட்பகுதியில் மனித எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டது. அதே போல் கீழடியில் 44 செ.மீ உயரமுள்ள சுடு மண் வட்டை போன்ற அமைப்பு ஒன்று வெளிப்புறத்தில் 2 கயிறு போன்ற வடிவமைப்பு ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: ஆசிரியர்கள் இனி பள்ளிக்கு வரலாம்!