கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூரில் செயல்படும் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சட்டப்போராட்டம் நடத்திய  அவரது பெற்றோர்  நீதிபதியின் அறிவுறுத்தலுக்குப் பிறகு உடலை பெற்றுக்கொள்வதாக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளுமாறும், நாளை மாலைக்குள் இறுதிச்சடங்குகளை முடிக்கும்படியும் நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார். 


அதன்படி இன்று காலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனையில் ஸ்ரீமதியின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஷவரன் குமார் ஜடாவத், வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கள்ளக்குறிச்சி பகுதியில் வன்முறை சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கவும், போராட்டம் நடத்துபவர்களை கைது செய்யவும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவனை வளாகத்திலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 


தொடர்ந்து மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. அசம்பாவிதம் சம்பவங்கள் நிகழாமல் இருக்க கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் இறுதிச்சடங்கில் உறவினர்கள்,  உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக 2 முறை மாணவியின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் ஸ்ரீமதியின் உடலுக்கு கண்ணியமான முறையில் இறுதி சடங்குகள் நடத்துங்கள், அவரின் ஆன்மா இளைப்பாறட்டும் என கூறிய நீதிபதி இதற்காக பெற்றோரிடம் பேசும்படியும் அவர்களது வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்தே அவர்கள் மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். அதேசமயம் மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையை ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவ குழு ஆய்வு செய்ய  வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண