கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கபட்டனர். இவ்வழக்கு விசாரனை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருவதால் ஒரு நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர்.
இந்நிலையில் 5 பேரையும் ஜாமீனில் விடுவிக்ககோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் மனு கடந்த 29 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டபோது மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி சின்னசேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் நகலை கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த மனுவை ஏற்க முடியாது எனவும் வழக்கு சிபிசிஐடி வசம் வழக்கு சென்றுவிட்டதால் சிபிசிஐடி பதிவு செய்த க்ரைம் நம்பரை கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு கூறி 1 ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மீண்டும் ஜாமீன் மனு மீதான விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி சாந்தி, சிபிசி ஐடி போலீசாரின் விசாரனை முழுமை பெறாததாலும், மாணவியின் உடலை இருமுறை உடற்கூறு ஆய்வு செய்த அறிக்கையை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ குழு ஆய்வு செய்து அறிக்கையை சமர்பித்த பிறகு விசாரணை செய்யப்படுமென்று கூறி ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கடந்த ஒன்றாம் தேதியன்று இறந்த மாணவியின் தாயார் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு மாணவியின் உடலை இரு முறை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அறிக்கையை கள்ளக்குறிச்சி மருத்துவகுழுவினர் ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்யும் குழுவிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் மீண்டும் ஜாமீன் மனு மீதான விசாரனை இன்று விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்த க்ரைம் எண்ணை கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு கூறி முக்கால் மணி நேரம் வழக்கினை ஒத்திவைத்து மீண்டும் விசாரனைக்கு எடுத்துகொண்டார். அப்போது ஜிப்மர் மருத்துவ குழு இரண்டு முறை செய்யப்பட்ட உடற்கூறு ஆய்வின் அறிக்கையை ஆய்வு செய்து தாக்கல் செய்யும் அறிக்கையை கொண்டு தான் க்ரைம் எண் கொடுக்க முடியும் என தெரிவித்தால் வழக்கு விசாரனையை வருகின்ற 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேலும், பள்ளி மாணவி மர்ம மரண வழக்கில் கைது செய்யப்பட்ட கணித ஆசிரியை கிருத்திகாவிற்கு சேலம் மத்திய சிறையில் கொலை மிரட்டல் இருப்பதாக கூறியும் திருச்சி சிறைச்சாலைக்கு மாற்ற கோரி ஆசிரியையின் தந்தை ஜெயராஜ் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் 5 பேருக்கும் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் விழுப்புரம் மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா 5 பேருக்கும் கூடுதலாக 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க இன்று உத்தரவிட்டார். பள்ளி நிர்வாகத்தினர் 5 பேரின் ஜாமின் வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்