கரூரில் மாணவிகளை வற்புறுத்தி ஒயின் குடிக்க வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கரூரில் உள்ள அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்த 3 மாணவிகள் கடந்த ஏப்ரலில் நடந்த பொது தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களுக்கான சிறப்பு தேர்வு நடைபெற்ற நிலையில், 3 மாணவிகளும் பசுபதிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு தேர்வை எழுதி விட்டு வெளியில் வந்துள்ளனர். அதில் ஒரு மாணவியின் ஆண் நண்பர் அவர்களுக்கு ஒயின் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. 




அவற்றை குடித்த மாணவிகளில் ஒருவர் அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட மற்ற 2 மாணவிகள் பசுபதிபாளையம் பகுதியில் பேருந்தில் ஏறி சர்ச் கார்னர் வந்துள்ளனர். அங்கு வாந்தி எடுத்தும், பாதி மயக்க நிலையில் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்துள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவசர எண்ணான 100 என்ற போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவிகளை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 




மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களை வரவழைத்து பெற்றோர்களுக்கும், மாணவிகளுக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த தினேஷ் என்ற தீனா (22). மூன்று மாணவிகளையும் மதிய உணவுக்காக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ​​ மூன்று மாணவிகளையும் ரெட் ஒயின் குடிக்க வற்புறுத்தி மிரட்டியுள்ளார். 


ஆகையால் அந்த மூன்று மாணவிகளும் அவர் கொடுத்த ரெட் ஒயின் குடித்துவிட்டு ஒருவர் வீட்டுக்குச் சென்ற நிலையில், இரண்டு மாணவிகள் பொது இடத்தில் தள்ளாடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தந்த நிலையில், அவர்களிடம் விசாரித்த போது மது வாங்கித் தந்தது தினேஷ் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் தினேஷ் என்ற இளைஞரை கைது செய்தனர். தினேஷ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.