கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளியில் மாடியில் இருந்து விழுந்து ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்தது தொடர்பாக டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
மாணவி ஸ்ரீமதியின் கடிதத்தில் தன்னை இரண்டு ஆசிரியர்கள் அவமானப்படுத்தும் விதத்தில் பேசியதாகவும் அதோடு மற்ற பள்ளி ஊழியர்களிடம் இதை சொல்லியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் தற்கொலை செய்துள்ளதாக சொல்லியுள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றியும் சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள், நிர்வாகிகள் என அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
முழுமையான விசாரணைக்கு பின்னரே ஸ்ரீமதி மரணத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதை சொல்ல முடியும். அதே பள்ளியில் இரத்த கறை இருப்பதுபோல சமூக வலைதளங்களில் பகிரப்படும் படம் உண்மைதான். ஆனால் அது ஸ்ரீமதி ரத்தக்கறையா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அந்த ரத்தக்கறை சற்று உயரத்தில் இருக்கிறது. அதையும் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம்.
ஏற்கனவே இந்த பள்ளியில் 5 மாணவர்களுக்கு இதுபோன்று நடந்துள்ளதாக சொல்வதில் இதுவரை உண்மை இருப்பதாக தெரியவில்லை. ஆனால், ஒரு மாணவி பரீட்சை பயத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஒரு மாணவர், இன்னொரு மாணவரை தள்ளிவிட்டு அவர் உயிரிழந்த சம்பவம் அந்த பள்ளியில் நடந்திருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் உயிரிழந்த பள்ளி மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வழங்க வேண்டும் என நெட்டிசன்கள் ட்விட்டர் பக்கத்தில் #justiceforsrimathi என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது மாணவி உயிரிழந்த விவகாரம் இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இறுதியாக மாணவி எழுதிய கடிதம் :
மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதி வைத்த கடிதத்தினை அவரது உறவினர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் படித்துக் காண்பித்தார். அந்த கடிதத்தில், ஆசிரியை பொது இடத்தில் சக மாணவர்கள் முன்னிலையில் மாணவியை திட்டியதாகவும், தனது பள்ளி கட்டணம் விடுதி கட்டணம் மற்றும் புத்தக கட்டணம் ஆகியவற்றை தனது தாயிடம் திருப்பி வழங்குமாறும் "I Am sorry Amma I Am Sorry Appa I Am Sorry Santhosh" என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்