சென்னை பொத்தேரியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமில்லாமல் பிற மாநிலத்தைச் சேர்ந்த மற்றும் வெளிநாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகள் கூட இந்த கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.



 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதியம் மூன்று மணி அளவில் சுமார் 80க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் திடீரென்று தாக்கி கொண்டார்கள். கடந்த சில மாதங்களாக பள்ளி கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும் அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபல கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் தாக்கிக் கொள்ளும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

 



 

குறிப்பாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இந்த மோதல் சம்பவமானது நடைபெற்றுள்ளது. மாணவர்களுக்குள் நடைபெற்ற இந்த மோதலில் கற்களைக் கொண்டு மாறி மாறி தாக்கி கொண்டுள்ளனர். ஒருவருக்கு ஒருவர் மாணவர்கள் தாக்கிக் கொண்டதில் பலருக்கு ரத்த காயம் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 



 

இச்சண்டையில் ஈடுபட்ட  தேவஷிஸ் சமோலி, ஆசிக் பிள்ளை ( நான்காம் ஆண்டு) பயிலும் இரண்டு மாணவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஆர்த்தி அவர்கள் முன் ஆஜர் படுத்தினர். இதனை தொடர்ந்து வழக்கை விசாரனை செய்த நீதிபதி குற்றச்செயலில் ஈடுபட்ட  இரண்டு மாணவர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதை  தொடர்ந்து, மாணவர்கள்  இருவரையும் செங்கல்பட்டு சிறைசாலையில் காவல்துறையினர் அடைத்தனர். பின்னணியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.