கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 27 பேர் ஆவார்கள். ஒரே கிராமத்தில் 27 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


27 உடல்கள் அடக்கம்:


இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று அடக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினர் அவர்களது சம்பிரதாயப்படி அடக்கம் செய்தனர். இதன்படி, உயிரிழந்தவர்களில் 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் எரியூட்டப்பட்டு தகனம் செய்யப்பட உள்ளது.


மீதமுள்ள 6 பேர் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது உடல்கள் கிறிஸ்தவ கல்லறையில் ஒருவர் உடல் பின் ஒருவர் உடல் என அடக்கம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் காலை முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஒரே நேரத்தில் 27 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட உள்ளதாலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி அவர்களது உறவினர்களும் அந்த கிராமத்தில் இருப்பதால் இறுதி ஊர்வலம் அமைதியாக நடைபெறுவதற்காக ஏராளமான போலீசார் குவிந்துள்ளனர்.


இறுதிச்சடங்கின்போது கனமழை:


தமிழ்நாட்டையே கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராய மரணம் உலுக்கி வருகிறது. நேற்று காலை முதல் தொடங்கிய உயிரிழப்பு இன்று வரை 39-ஆக பதிவாகியுள்ளது. இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்க்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கருணாபுரத்தில் இறுதிச்சடங்கில் நடைபெறும் இடத்தில் மழை பெய்ததால் இறுதிச்சடங்கு செய்வதிலும் சிரமம் ஏற்பட்டது.


உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நிலவரத்தை அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கண்காணித்து வருகின்றனர். முன்னதாக, அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் தவறு செய்வதர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.


மேலும், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சசிகலா உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்றனர். தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.