Kallakurichi Illicit Liquor:  கள்ளக்குறிச்சியில்  கள்ளச்சாராயத்தில் பாதிக்கப்பட்ட சுப்பிரமணி என்பவர் வீட்டிலேயே உயிரிழந்தார்.


மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் மரணம்:


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தான் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சேஷசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், இரண்டு தினங்களுக்கு முன்பாக கள்ளச்சாராய பாதிப்பு தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை சற்றே தேறிய நிலையில், யாரிடமும் தகவல் சொல்லாமல் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். குடும்பத்தினர் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், தான் குணமடைந்துவிட்டதாகவும், இனி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை என்றும் சுப்பிரமணி கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், இன்று காலையில் அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார். உடனடியாக குடும்பத்தினர் சங்கராபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலன்ன்றி சுப்பிரமணி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கள்ளக்குறிச்சியில் தங்கி பானி பூரி விற்பனை செய்து வந்த, உத்தரபிரதேசத்தச் சேர்ந்த ஒருவரும் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வீடு வீடாக செல்லும் மருத்துவ பணியாளர்கள்:


கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம், கள்ளச்சாராயம் அருந்திவிட்டு மருத்துவமனைக்கு வராத பலரையும், மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து சிகிச்சைக்காக அழைத்து வருகின்றனர். இந்நிலையில், உடல்நிலை சற்றே தேறிய நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவர்களின் முழு கண்காணிப்பு அவசியம். முற்றிலுமாக பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டதாக மருத்துவர்கள் கூறினால் மட்டுமே உயிரிழப்பை தவிர்க்க முடியும். அதை பொருட்படுத்தாமல் தப்பிச் செல்வது போன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.






மாவட்ட ஆட்சியர் தகவல்:


கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், “சிகிச்சையில் உள்ள 193 பேரில் 140 பேர் பாதுகாப்பாக உள்ளனர். சிலர் வென்டிலேட்டரில் உள்ளனர். இதுவரை மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தமிழக காவல்துறையின் சிபிசிஐடி பிரிவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.