உளுந்தூர்பேட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த கன்னியாஸ்திரியின் உடல் 2 நாள் கழித்து சடலமாக மீட்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா. இவருக்கு 24 வயது ஆகிறது. இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக கன்னியாஸ்திரி பயிற்சி பெற்று வந்திருக்கிறார். கன்னியாஸ்திரி பயிற்சி சில மாதங்களுக்கு முன்பு முடிந்திருக்கிறது. அதனை முடித்துவிட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பி.எஸ்சி., கணித பாடம் எடுத்து படித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் புனித சார்லஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது, அது வீட்டிற்கு அருகில் இருப்பதால் அங்கேயே சேர்ந்து கணித படிப்பை தொடர்ந்து வந்தார். மூன்று ஆண்டுகள் உள்ள இந்த படிப்பில், முதலாமாண்டுதான் படித்துவந்தார் கௌசல்யா. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை மதியம் வகுப்பு முடித்துவிட்டு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார் கௌசல்யா.
விடுதிக்கு சென்ற கௌசல்யா அருகில் உள்ள விவசாய நிலத்தில் மஞ்சள் அறுவடை பணிகளை பார்வையிட சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் சென்று அந்த சிறுவனுக்கு சாக்லேட் வழங்கி விட்டு சிறிது நேரம் விளையாடியுள்ளார். பின்னர் விடுதிக்குச் செல்லும் பொழுது எதிர்பாராத விதமாக அங்குள்ள விவசாய தரை கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் நேற்றுமுன்தினம் மதியத்தில் இருந்து கௌசல்யாவின் உடலை தேடிவந்தனர். 90 அடி ஆழ கிணற்றில் முழுமையாக தண்ணீர் இருந்ததால் அவரது உடலை கண்டு பிடிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. புதன் கிழமை மாலை 6.30 மணிக்கு மேல் போதிய வெளிச்சமின்மை காரணமாக கௌசல்யாவின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. தீயணைப்பு துறையினரும் தேடும் பணியை நிறுத்தினர்.
தேடும் பணியை நிறுத்திவிட்டு ராட்சத குழாய்கள் மூலம் 3 விவசாய நீர்மூழ்கி மோட்டார்களை பயன்படுத்தி விடிய விடிய கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்தது. இந்த நிலையில் வியாழன் அன்று காலை கௌசல்யாவின் உடல் கிணற்றில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளான வியாழக்கிழமை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் இருந்த கௌசல்யாவின் உடலை கைப்பற்றினர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாஸ்திரியான கௌசல்யாவின் மரணம் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.