அம்மா உணவகம் போல, ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் தமிழ்நாட்டில் கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் அர.சக்கரபாணி சமீபத்தில் அறிவித்தார்.  


ஆனால் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலைஞர் உணவகம் என்ற பெயரில் அம்மா உணவகத்தை இருட்டடிப்பு செய்யவே தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது எனவும் அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் மாதிரி சமுதாய சமையல்கூடம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.




இதற்கு மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். 


அப்போது பேசிய அவர், “திமுகவின் முன்னாள் தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியால் தமிழ்நாடு மக்களுக்கு சத்தான உணவுப்பொருட்கள் வழங்கும் பொருட்டு ‘சிறப்பு பொது விநியோகத் திட்டம்‘ அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் ரூ.978 கோடி செலவில் 2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகை பொருள்களும் ரூ.4 ஆயிரம் ரொக்க தொகையும் வழங்கப்பட்டன. வருகின்ற 2022-ஆம் ஆண்டு பொங்கல் பணிகையையொட்டி ரூ.1161 கோடி மதிப்பீட்டில் 2.15 கோடி அட்டைதாரர்களுக்கு 20 வகையான உணவுப்பொருள்ள் வழங்கப்படவுள்ளன.


தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 407 உணவகங்களும், 14 மாநகராட்சிகளில் 105 உணவகங்களும், நகராட்சிகளில் 138 உணவகங்களும், கிராம பஞ்சாயத்துகளில் நான்கு உணவகங்களும் செயல்படுகின்றன.




இந்த உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும், பல்வகை சாதங்கள் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்குப் பகலிலும், 2 சப்பாத்திகள் பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன.


இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மாநில அரசு மற்றும் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகள் இதற்காக ரூ.300 கோடி செலவு செய்கின்றன. விளிம்பு நிலையிலுள்ளவர்களுக்கு உணவுப் பாதுகாப்பினை சமூக உணவகங்கள் மூலமாக உறுதி செய்திடும் வகையில் இதற்கு முந்தைய கூட்டத்தின்பொழுது குறிப்பிட்டவாறு “கலைஞர் உணவகம்“ என்ற பெயரில் மேலும் 500 சமூக உணவகங்களைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும்” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண