Kalaignar Magalir Urimai Scheme: தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், அத்தியாவசிய செலவுகளுக்கு இனி யாரையும் சார்ந்திருக்க வேண்டாம் என்ற நம்பிக்கையை தந்திருப்பதாக பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்:


சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பதலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்து இருந்தது. அதன்படி, விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஒரு கோடியே 6 லட்சம் பேர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ளவர்களாக அரசு அறிவித்தது. மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15ம் தேதி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஒருநாள் முன்னதாகவே நேற்றே பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்ட தமிழக அரசு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. இதுதொடர்பாக பயனாளர்கள் பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.


”பிறந்து வீட்டு சீதனத்தை மிஞ்சிய உதவி”


சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “ஏற்கனவே மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயண திட்டம் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது மாதம் ஆயிரம் ரூபாய் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். இலவச பேருந்து பயணத்தின் மூலம் மாதத்திற்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரையில் மிச்சமாகும் நிலையில், புதிய திட்டத்தின் மூலம் கூடுதலாக 1000 ரூபாய் வருவாயாக கிடைக்கிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும் 2000 ரூபாயை எனக்கு கிடைக்கிறது. பொறந்து வீட்டு சீதனம் கூட ஒரு முறைதான் வரும். ஆனால், மாதா மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதோடு, அதை எங்களது உரிமை எனவும் கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களின் நம்பிக்கையாக உள்ளார்” என தெரிவித்தார்.


”பெண்களின் தந்தையாக முதலமைச்சர் ஸ்டாலின்”


திருவள்ளூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசுகையில், கல்லூரியில் முதலமாண்டு பயிலும் எனது மகள் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். தற்போது எனக்கும் அரசு சார்பில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், எனது தினசரி வாழ்வியல் மட்டுமின்றி, எனது மகளின் எதிர்காலத்திற்கும் தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. ஒவ்வொரு பெண்ணின் தந்தையாக சிந்தித்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது” என பேசியுள்ளார்.


சேலத்தைச் சேர்ந்த பயனாளி ஒருவர், “இனி எல்லாவற்றிற்கும் கணவரை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுக்கலாம். இதுநாள் வரையில் நான் சேமிப்பு என எதையும் செய்ததில்லை. தமிழக அரசின் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகையில், ஒரு பகுதியை இனி சேமிக்கலாம். ஏழைப்பெண்களின் முன்னேற்றத்திற்கான ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்லாண்டு வாழ வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


இதே போன்று, அரசின் இந்த தொகையை செல்வ மகள் திட்டத்திற்கு பயன்படுத்துவேன், மளிகை பொருட்கள், மருத்துவ செலவை சமாளிக்கலாம், சிலிண்டர் வாங்குவதற்கு உதவிகரமாக இருக்கும், என் பெண்ணின் திருமனத்திற்கான நகை சீட்டு போடுவேன், இட்லி கடையை வைத்து வாழ்வில் முன்னேறுவான், மாதவிடாய் காலத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு உதவியாக இருக்கும்” என பயனாளிகள் பலரும் உள்ளம் மகிழ்ந்து பேசியுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெண்களின் வாழ்வியலை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கான இன்றியமையாத திட்டமாக இருக்கும் என பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.