விழுப்புரம் : கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் வரப்பெற்ற குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து , கைப்பேசியில் OTP எண் கேட்கப்பட்டால் எவரும் பகிரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அறிவித்துள்ளார்.


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் (15.09.2023) துவங்கப்பட உள்ள நிலையில் இன்று முதல் ரூ.1000/- மகளிரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகையினை வங்கியிலிருந்து எடுப்பதற்கு உரிமைத் தொகை ATM கார்டு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஒரு சில மகளிருக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியினைத் தொடர்ந்து OTP  எண் கேட்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது.


இத்திட்டத்தில் பயனடைவதற்கு OTP எண் ஏதும் நடைமுறையில் இல்லை. இத்திட்டத்தின் கீழ் ஏடிஎம் கார்டு மூலமாகவோ அல்லது வங்கியில் நேரடியாக சென்று தொகையினை எடுத்துக்கொள்ளலாம். மேலும் OTP எண் பகிர எவரேனும் தொலைபேசியில் கேட்கப்பட்டால் அவரது கைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04146-223265 மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04146-222172 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தொகை வரப்பெறாதவர்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை அணுகி விவரத்தினை தெரிந்து கொள்ளலாம். மேலும் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி அவர்கள் தெரிவித்துள்ளார்.




கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ( Women Entitlement Amount Scheme )

 

தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 15-ம் தேதி  காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்டமான விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

 

  பிரத்யேக ஏடிஎம் கார்டு

 

மகளிர் உரிமை திட்டத்தில் ஒரு கோடியே 6,50,000 குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற போகிறார்கள். மொத்தம் ஒரு கோடி 63 லட்சம் விண்ணப்பம் வந்திருந்த நிலையில் 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு என பிரத்யேக ஏடிஎம் கார்டு வழங்கப்படும்  என தகவல் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரத்தில் நாளை ஏடிஎம் கார்டுகளை வழங்கி இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். பயனாளிகளுக்கு நாளை வங்கிக்கணக்கில் ரூபாய் ஆயிரம் ரூபாய் வர வைக்கப்படுகிறது.