அறிஞர் அண்ணா என அன்போடு அழைக்கப்படும் தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 15) மிகவும் விமரிசையாக அனைத்து கட்சி தரப்பிலும் கொண்டாடப்படுகிறது.  கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற இந்த முழக்கம் அவருக்கே உரியது. இதனை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர் அண்ணா. தனது மொழி புலமைக்காக பெயர் பெற்றவர் அண்ணா. தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர். கல்லூரி காலங்களில் ஆங்கிலம் பயின்று இருந்தாலும், தமிழ் மொழி மீது அவருக்கு தனி பற்று இருந்தது.


அண்ணா மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் கரகரத்த குரலில் வளத்துடன் பேசும் திறன் பெற்றவர்.


அரசியல் வாழ்க்கை: 


அறிஞர் அண்ணா அவர்கள் 1962 லிருந்து 1967 வரை மாநிலங்கவை உறுப்பினராக பதவி வகித்தார். 1962 இல் அண்ணா மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றி பெற்று சட்டசபையில்  எதிர்க்கட்சியாக இடம்பெற்றார். அப்போது காங்கிரஸ் தரப்பில் அண்ணாவை பார்த்து ‘ உங்களுக்கு நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை’ என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அப்போது அண்ணா மிகவும் சாதுர்யமாக ‘ நல்ல எதிர்க்கட்சி இல்லை என அடிக்கடி சொல்கிறீர்கள், விரைவில் அந்த குறையை நீங்களே தீர்த்து விடுவீர்கள்போல. ஒரு காலத்தில் நீங்கள் இருக்கும் இடத்தில் நாங்கள் இருப்போம்’ என பதிலளித்தார்.


1965 ஆம் ஆண்டு அவர் ஹிந்தி போராட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்களின் ஆதரவு அவருக்கும் அவரது கழகத்திற்கும் கிடைத்தது. இதன் காரணமாக 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்றார். அப்போது தான் தமிழ்நாட்டில் முதல் முறையாக திராவிட ஆட்சி அமைந்தது. இவர் தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக இருந்தது. ஆட்சி பொறுப்பேற்றதும் சுய மரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கினார்.


மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அது மட்டுமல்லாமல்  கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் நிலவும் மூன்று மொழி திட்டத்துக்கு எதிராக   தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை அமல்படுத்தினார். 


அண்ணாவின் பொன்மொழிகளில் ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும், மறப்போம் மன்னிப்போம், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்,  எங்கிருந்தாலும் வாழ்க, சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒளி விளக்கு, கத்தியை தீட்டாதே புத்தியைத் தீட்டு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு  என்பதெல்லாம் மக்கள் மனதில் இன்றளவும் நீங்காத இடம் பெற்றவை. 


முதலமைச்சராக பதவியேற்று இரண்டு ஆண்டுகளில் அவர் புற்றுநோய் காரணமாக மறைந்தார். மிகவும் எளிமையானவர் அண்ணா. வாழும் போது பல திட்டங்களுக்கு அடிபோட்டு சாதனை படைத்தாலும் மறைந்த போதும் கின்னஸ் சாதனை படைத்தார், ஆம் உண்மைதான்... அவரது இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துக்கொண்டனர். சுமார் 15 மில்லியன் மக்கள்  கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள், இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இவருடைய உடல் சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. 


தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், அண்ணாவின் பிறந்த நாளான இன்று 127 போலீசாருக்கு அண்ணா பதக்கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.