திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ”கலைஞரின் கனவுகளை நிறைவேற்றி வருகிறோம்” என பதிவிட்டுள்ளார்.


இன்று கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ”மூத்த பிள்ளை முரசொலி வாயிலாகத் தலைவர் கலைஞருக்கு உறுதியளித்திருக்கிறேன். இது, கனவுகள் நிறைவேறும் காலம்!” என குறிப்பிட்டுள்ளார்.






மேலும் அந்த பதிவில் இருக்கும் வீடியோவில், “நூற்றாண்டு விழா நாயகரே, உங்கள் கனவுகளை நிறைவேற்றி வருகிறோம், நீங்கள் இருந்து செய்வதை தான் நான் இருந்து செய்கிறேன். 95 வயது வரை இனம், மொழி, நாடு காக்க ஓய்வெடுக்காமல் உழைத்தீர்கள். உங்கள் உழைப்பின் உருவக வடிவம் தான் இந்த நவீன தமிழ்நாடு. ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றீர்கள். அந்த கரகர குரல் தான் கண்டிப்பு குரலாக மாறி என்னை உழைக்க வைத்தது. உங்கள் நம்பிக்கையை காக்கவே உழைத்துக்கொண்டிருக்கிறேன்.



8 கோடி மக்களும் எதாவது ஒரு வகையில் பயன்பெறும் திட்டத்தை தீட்டி திராவிட ஆட்சியை தித்திக்கும் மக்கள் ஆட்சியாக நடத்தி வருகிறோம். தமிழ்நாடு தலை நிமிர்கிறது. உங்கள் கனவுகள் நிறைவேறும் காலமாக மாறிவிட்டது. 2024 ஆண்டு தேர்தல் எங்களை எதிர்நோக்கி வருகிறது. 5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் அல்ல இது. அந்த கட்சியா இந்த கட்சியா என்ற தேர்தல் அல்ல. இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா, இருக்க முடியாதா என்ற தேர்தல் இது. இந்தியாவுக்கான குரலை எழுப்பி வருகிறோம். அனைத்துக்குமான தொடக்கும் தமிழ்நாடு. இந்தியாவுக்கான பாதை அமைத்ததும் தமிழ்நாடு. சமூக நீதி, சுய மரியாதை, சமதர்மம், மொழி, இன உரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி இந்தியா என்ற உங்களது விரிந்த கனவுகளை இந்தியா முழுவதும் அகலமாக விரித்துள்ளோம். திமுக மாநில கட்சி தான், அனைத்து மாநிலங்களுக்கும் உரிமையை பெற்று தரும் கட்சியாக இருக்க வேண்டும் என்ற உங்கள் கனவை நிறைவேற்றும் காலம் இது. நீங்கள் உருவாக்கிய நவீன தமிழ்நாட்டை நீங்களே வழிநடத்துகிறீர்கள், எங்கள் வெற்றிக்கு வாழ்த்துங்கள்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.


Kalaignar Karunanidhi : கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள்.. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணி..