Kalaignar Karunanithi Anniversary : திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டுகிறது. ஆண்டுதோறும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடப்பது வழக்கமாகும், அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகே புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடைபெற்றது.
ஓமந்துராரில் இருக்கும் கருணாநிதி சிலைக்கு கீழே இருந்த அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் அமைதிப் பேரணி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில், துரைமுருகன், பொன்முடி, ஏ.வ வேலு, கே.என். நேரு என அமைச்சர்கள் உட்பட, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணகானோர் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்னதாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மற்றும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இது ஒருபுறம் இருக்க இந்த ஆண்டு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை அதாவது ஓராண்டு வரை நூற்றாண்டு விழா கோலகலமாய் கொண்டாடப்படுகிறது. கலைஞர் நூலகம், கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, கலைஞர் கோட்டம் என பல திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வரும் செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதிப்பேரணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சென்னை கேடம்பாக்கத்தில் இருக்கும் முரசொலி அலுவலகத்தில் இருக்கும் கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். மேலும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் கருணாநிதியின் சிலைக்கும், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.