“வீரன் சாவதே இல்லை – கோழை வாழ்வதே இல்லை”


“வீரன் சாவதே இல்லை – கோழை வாழ்வதே இல்லை” என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வரலாறாகி, வாழ்ந்து கொண்டிருப்பவர் கலைஞர் கருணாநிதி. அவரின் பெயருக்கு முன் ஓட்டியிருக்கும் கலைஞர் எனும் அடைமொழியை கொடுத்தது யார் என பலருக்குத் தெரிந்தாலும், தெரியாதவர்களுக்கான தகவல் இது. அதைக்கொடுத்தது, அந்தக்காலத்தில் புரட்சிக் கருத்துகளைப் பரப்பும் விதத்தில் நடித்து வந்த நடிகவேள் எம்.ஆர். ராதா.


அதாவது, ராதாரவி, ராதிகா ஆகியோரின் அப்பா என்றால் இன்றைய தலைமுறைக்குச் சட்டென தெரியும். கருணாநிதி எழுதிய தூக்குமேடை நாடகத்தைப் பார்த்துவிட்டு, அதன்பின் நடைபெற்ற விழாவில், கலைஞர் எனும் பட்டத்தை கருணாநிதிக்கு வழங்குகிறேன் என அறிவித்தார் அந்தக்காலத்தில் மக்கள் கலைஞனாக இருந்த எம்.ஆர். ராதா.  அதன்பின், கருணாநிதிக்கு, கலைஞர் என்ற பட்டமே அடையாளமாகிவிட்டது. இயல், இசை, நாடகம் உள்ளிட்ட துறைகளில் எத்தனையோ கலைஞர்கள் இருந்தாலும், தமிழ் பேசும் உலகில் கலைஞர் என்றால் சட்டென நினைவுக்கு வருவது கலைஞர் கருணாநிதிதான். 


இருமுறை கட்சி செங்குத்தாக உடைந்தாலும், தம்முடைய நிர்வாகத்திறமையாலும் தொண்டர்களின் அசைக்க முடியாத ஆதரவாலும் திமுக எனும் கட்சியைக் கட்டிக்காத்தவர் கருணாநிதி என்றால் மிகையில்லை. எம்ஜிஆர் பிரிந்து அதிமுக உருவாக்கிய போதும், வைகோ பிரிந்து மதிமுக உருவான போதும், நொடிந்து போகாமல், தொண்டர்களின் அன்பாலும், அரவணைப்பாலும் திமுக-வின் ஆளுமைமிகு தலைமையாக, உதயசூரியனாக ஒளிவீசியவர் கருணாநிதி. 




தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில், நாட்டையே வழிநடத்தும் பிரதமராக வாய்ப்பு கிடைத்தும், தம்முடைய உயரம் தமக்குத் தெரியும் எனக் கூறி, பிரதமர்களை உருவாக்கும் அரசியல் சாணக்கியனாக, இந்தியாவின் மூத்த அரசியல் தலைவராக அனைவராலும் பார்க்கப்பட்டவர் கருணாநிதி என்பதையும் வரலாறு மறக்காது. 


தேசிய அரசியலும் கருணாநிதியும்:


மாநிலத்தின் தலைமை பீடத்திற்குள் தம்மை சுருக்கிக்கொண்டாலும், தேசிய அரசியலில் தமக்கு இருந்த செல்வாக்கால், மாநிலத்திற்கான ஆதாயங்களைப் பெற்றுத் தந்தவர்களில் முக்கியமானவர் கருணாநிதி.  உதாரணத்திற்கு, 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் வாதாடி, போராடி, சுதந்திர தினத்தன்று, மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்தார் கருணாநிதி. 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர் என்பதும் பசுமரத்தாணி போல் மாநில உரிமை சரித்திரத்தில் இடம்பெற்று இருக்கும். 


கலைஞரின் பேச்சும், கூர்மையும், உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் திறமையும் எதிராளிகளையும் கைத்தட்டி, பாராட்ட வைக்கும்.   இதற்கு, ஆயிரக்கணக்கான நிகழ்வுகளை எடுத்துக்காட்டாக கூறலாம். உதாரணத்திற்கு, சட்டப்பேரவை விவாதமொன்றில், கோயிலுக்கே போகாத கருணாநிதி, தாழ்த்தப்பட்ட மக்கள் கருவறைக்குள் செல்ல அனுமதி இல்லாதது குறித்து ஏன் கவலைப்படுகிறார்  என அன்றைய காங்கிரஸ் எம்.எல்.ஏ அனந்த நாயகி கேட்கிறார். உடனடியாக எழுந்திருக்கும் கருணாநிதி,  ``கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குச் செல்கிறார்கள்... வாதாடுபவர்களும் தானே செல்ல வேண்டும்'' என பதிலடி கொடுத்தது, அனைவரையும் யோசிக்க வைத்தது. 




கருணாநிதியின் தக் லைஃப்:


அதேபோன்று, எம்ஜிஆர் முதலமைச்சர், சபாநாயகராக க. ராஜாராம் இருக்கிறார். சட்டப்பேரவை விவாதமொன்றின் போது, எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் தொடர்முழக்கம் எழுப்புகின்றனர். சபாநாயகர் ராஜாராமால், அவையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனே, எழுந்து நின்ற அவர், எப்படியோ போங்க, இனி, உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும் என எதிர்க்கட்சியினரை பார்த்து கூறிவிட்டு அமர்கிறார். உடனே எழுந்த கருணாநிதி, தமது கட்சி எம்எல்ஏ-க்களை அமைதிப்படுத்திவிட்டு, சபாநாயகரைப் பார்த்து, இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தும்னு சொன்னீங்க. அதனால்தான், நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏனெனில், இதற்கு முன்பு “ஆண்டவன்” (ஆட்சி செய்தவன்) நான்தானே எனக் கூற, அவை முழுவதும் கைதட்டல் எழுந்ததாம் என சட்டப்பேரவை பக்கங்களில் பதிவாகியுள்ளது.


மற்றொரு முறை, தமிழகத்தில் தேர்தல் காலம். காங்கிரஸும் அதிமுகவும் கூட்டு வைத்திருந்தது. இந்தச்சமயத்தில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில், மாணவர்களிடையே பேச வருகிறார் கருணாநிதி. கல்லூரியின் சார்பில், அரசியல் பேசக்கூடாது என உத்தரவு வருகிறது. சரியென்ற கருணாநிதி, மாணவர்களைப் பார்த்து, “என்னை அரசியல் பேசக்கூடாது என்றார்கள். சரி பேசவில்லை. ஆனால், நிகழ்ச்சி முடிந்தவுடன் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, சாப்பிட்டு முடித்தவுடன், அனைவரும் மறக்காமல் “இலை”யை தூர வீசிவிட்டு, “கை”யை மறக்காமல் கழுவிவிடுங்கள் என அழுத்தம் திருத்தமாக இரண்டு முறை பேசி, மாணவர்களின் அமோக கைதட்டல்களை அள்ளியதும் மறக்கமுடியாதது.




மறக்கமுடியாத ஆளுமை கலைஞர் கருணாநிதி:


தாமும் ஒரு பத்திரிகையாளர் என்பதால், ஊடகங்களை அவர் கையாளுவதில் எப்போதும் ஒரு நெருக்கம் இருக்கும். தம்மை மடக்கும் அளவுக்கு கேள்வி கேட்டாலும், கட்டாயம் பதில் அளிக்கும் பழக்கம் கொண்ட கருணாநிதி, ஒருமுறை தொலைக்காட்சி பேட்டியொன்றில், கடவுள் இருந்தாலும் இருப்பாரோ என நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா என கேள்வி கேட்கப்பட்டது. சற்றும் யோசிக்காமல்  பதிலளித்த கருணாநிதி, என் வாழ்க்கையில் அந்தக் கணம் குறுக்கே வராததற்கு அந்தக் கடவுள்தான் காரணமோ என்னமோ தெரியல என பதிலடி  கொடுத்தார்.


அதேபோல், மாற்றுக்கட்சித் தலைவர்களின் அறிக்கைகளைக் கண்டும் காணாமலும் செல்லும் அரசியல் தலைவர்கள் மத்தியில், அவர்களின் கேள்விகளுக்கு மறக்காமல் பதிலளிப்பதிலும் கருணாநிதிக்கு நிகர் அவரேதான் எனலாம். உதாரணத்திற்கு, மதுக்கடைகளை மூடக்கோரி, பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர் கோரிக்கை வைக்கின்றனர். அந்த நேரத்தில், மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைத்து, முதலமைச்சரான கருணாநிதி உத்தரவு போடுகிறார். இந்த நடவடிக்கை தொடர்பாக பேசிய டாக்டர் ராமதாஸ், நான் கேட்டதோ அறுவை சிகிச்சை, ஆனால், கருணாநிதி செய்திருப்பதோ முதலுதவி என விமர்சனம் செய்திருந்தார்.  உடனே பதிலளித்த கருணாநிதி, அறுவை சிகிச்சைக்கு முன்பு முதலுதவிதான் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், டாக்டரான ராமதாஸூக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம் எனக்கூறியிருந்தார்.




தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் வாங்கி தந்த கலைஞர் கருணாநிதி பிறந்த நாளின் நூற்றாண்டு காலத்தில், இதுபோல பல நினைவலைகளைப் பகிர்ந்துக் கொண்டே போகலாம். ஆனால், இது போன்ற கலைஞர் குறித்த சுவாரஸ்ய தகவல்களும் செய்திகளும் சமூக வலைதளங்களில் காட்டாறாக தற்போது ஓடிக்கொண்டிருக்கும் என்பதால், இங்கு பதிவிடவில்லை. இருப்பினும், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு விடயம் என்னவென்றால், அரசியல், கொள்கை ரீதியாக அவருடன் மாற்றுக்கருத்துகள் பல இருந்தாலும், அனைத்தையும் கடந்து, தமிழும் தமிழகமும் தமிழர்களும் மறக்கமுடியாத ஆளுமை கலைஞர் கருணாநிதி என்றால் மிகையில்லை.