காலனா சம்பளம் என்றாலும் அரசு சம்பளமா இருக்கனும்னு சொல்வாங்க. அரசு வேலை என்பது படிக்கும் காலத்தில் ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது. அந்த கனவை நினைவாக்க போராடுபவர்கள் பல ஆயிரம் இருந்தாலும் அதை எட்டிப்பிடிப்பவர்கள் சில ஆயிரம் பேர்கள்தான். இந்த கனவை நிறைவேற்றுவதற்கு வழி தெரியாமல் தவிக்கும் இளைஞர்கள் பலர் இருந்தனர். இந்த சூழலில் போட்டித் தேர்வுகளே அரசு வேலையை அடைவதற்கான வழி என்பதை இளைஞர்கள் உணரத் தொடங்கி உள்ளனர். இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. போட்டித் தேர்வு எழுதாத இளைஞர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தேர்வை எழுதி வருகின்றனர். இதிலும் சிலர் வருட கணக்கில் இதற்காகவே தனியார் பயிற்சி வகுப்புகளில் பயின்றும் வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு தேர்வும் தங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் தேர்வாக அமைகிறது. இதனால் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விரைந்து பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.




இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேர்வு நடத்தப்படாததால் 3 ஆண்டுகளாக பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. அதற்கு ஏற்ப காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்று போட்டித் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பதவிகளில் உள்ள 7 ஆயிரத்து 301 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந் தேதி தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 24-03-23 அன்று வெளியிடப்பட்டது. அதன்பிறகு 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள் அதிகரித்து 10 ஆயிரத்து 117 என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.




2018-ம் ஆண்டு 12 ஆயிரம் காலிப்பணியிடங்களும், 2019-ம் ஆண்டு 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை. இதனால் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த போட்டி தேர்வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. கொரோனா தொற்று காலத்தில் தனியார் துறையில் பணியாற்றி வேலை இழந்தவர்கள், புதிதாக கல்லூரி படித்து முடித்தவர்கள் அதிக அளவில் போட்டித் தேர்வில் கவனம் செலுத்தினர்.




இதனால் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் தேர்வில், 3 ஆண்டுகளாக நிரப்பப்பட வேண்டிய அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகும் என்று போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். குறைந்த அளவிலான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதால் 3 ஆண்டுகளாக போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த மாணவ, மாணவிகள் மத்தியில் பெருத்த ஏமாற்றமும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் அரசுப்பணி கனவாகி போய்விடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். இதனால் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும், அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி பணி வழங்க வேண்டும் என்றும் போட்டித் தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்