கோகுல்ராஜ் ஆணவக் கொலை(Gokulraj Honour Killing) மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்த மேல்முறையீட்டு வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேருக்கான ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். அதேபோல் இந்த வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் 5 பேரை விடுவித்ததில் நாங்கள் செல்ல விரும்பவில்லை என கூறினர்.
மேல்முறையீட்டு வழக்கு
கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதேநேரத்தில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம், இன்று அதாவது ஜூன் மாதம் 2ஆம் தேதி தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில், யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேருக்கு மதுரை சிறப்பு நீதி மன்றம் அளித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை எனக்கூறி, அனைவருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. மேலும், முதல் குற்றவாளியான தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் மரணத்துக்கு நீதி கேட்டு அவரது தாயார் நீதி மன்றத்தில் சட்டப்போராட்டத்தினை மேற்கொண்டார். முதலில் இந்த வழக்கினை விசாரித்த காவல்துறை கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிட்டனர். ஆனால் அதன் பின்னர், கோகுல்ராஜின் உடலை கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்ற பின்னர் தான், இந்த வழக்க்இல் உண்மைத் தன்மை தெரியவந்தது. கோகுல்ராஜின் உடலை கூறு ஆய்வு செய்த, ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் சம்பத் அளித்த அறிக்கையில் தான் கோகுல் ராஜ் மிகவும் மோசமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
அதன் பின்னர் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகன் மற்றும் கோகுல்ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்த்திபன் என இருவரும் இணைந்து வாதாடி, இந்த வழக்கில் மதுரை கீழமை நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்ததுடன், குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடி தண்டனையை உறுதி செய்துள்ளனர்.