கைலாச அதிபர் நித்யானந்தா, கடந்த மே மாதம் முதல் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்தார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அவ்வப்போது அவரது பேஸ்புக் பக்கம் மூலம், ஏதாவது ஒரு பதிவை போட்டு, அவர் நலமோடு இருப்பதாக கூறப்பட்டது. முகமின்றி, காகிதமும் கைகளையும் காட்டி பேப்பரில் எழுதியதாக சில பதிவுகளை நித்யானந்தாவின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டனர். க்ஷ


அனைத்து பதிவுகளிலும் தனது உடல்நிலை சரியில்லை என்பதை மட்டும் நித்யானந்தா உறுதி படுத்தியிருந்தார். உணவு உட்கொள்ள முடியவில்லை, உறக்கம் இல்லை என்கிற பிரச்னையையும் அவர் தெரிவித்திருந்தார். 27 மருத்துவர்கள் கொண்ட குழு, தன்னை கண்காணித்து வருவதாகவும், விரைவில் குணமடைவேன் என்றும், அதுவரை சமாதியில் இருப்பேன் என்றும் நித்யானந்தா தெரிவித்து வந்தார்.



இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன் கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், நித்யானந்தாவின் உற்சவர் சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் போட்டோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை இதுவரை இல்லை. அவர்கள் இறந்த பின், வழிபாடு நடத்துவது நடைமுறையில் உள்ளது. என்னதான், நித்யானந்தா தன்னை தெய்வ அவதாரமாக கூறிக்கொண்டாலும், அவர் ஒரு இறைவனை வழிபட்டு கொண்டிருந்தார். 


அது சிவன் போன்ற தெய்வங்களை கொண்ட சாமி வழிபாடு ஆகும். அப்படி இருக்கும் போது, திடீரென நித்யானந்தா சிலைகளை பிரதிஷ்டை செய்து, அதற்கு நித்யானந்தேஷ்வரா இந்து கோயில் என்றும் பெயர் வைத்துள்ளனர். 


சமாதியில் இருப்பதாக கூறி வந்த நித்யானந்தா ஜீவசமாதியாகி, அதன் பின்பே இந்த கோயில் வைக்கப்பட்டதா என்கிற சந்தேகம் எழுகிறது. கடந்த சில நாட்களாகவே நித்யானந்தா தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. அவரது உடல்நிலை தொடர்பான அறிக்கைகளோ, தகவலோ இடம் பெறவில்லை. இந்நிலையில், திடீரென நித்யானந்தாவிற்கு கோயில் கட்டி, அதற்கு பூஜைகள் செய்யத் தொடங்கியிருப்பதை பார்க்கும் போது, உண்மையிலேயே நித்யானந்தாவிற்கு ஏதோ நடந்திருக்க கூடும் என்றே தெரிகிறது. 


நித்யானந்தா இல்லையென்றால், தற்போது கைலாசா யார் கட்டுப்பாட்டில் உள்ளது. யார் உத்தரவின் பேரில் கைலாசா இயங்குகிறது என்கிற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. நித்யானந்தாவின் இழப்பை முறையாக அறிவித்தால், அவர்களின் பக்தர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதால், இது போன்ற சமிக்ஞை மூலம் தகவல் தெரிவிக்கப்படுவதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 


எது எப்படி இருந்தாலும், இன்னும் கூட கைலாசாவிலிருந்து உறுதியான எந்த தகவலும் வரவில்லை.