சேலத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "கல்வி வள்ளல் பச்சைத்தமிழர் என பெரியாரால் போற்றப்பட்டவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் காலத்தில் புதிய பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனால் தான் கல்வியை வளர்த்த காமராஜர் அவருடைய சேவை எப்பொழுதும் எல்லாருக்கும் தேவை. காமராஜர் அவர்களின் சமதர்மத்தை நிறுவிய சேவை இன்றைக்கும் தேவைப்படுகிறது.


நீட் தேர்வை ஒழிக்க தமிழகம் தான் முதலில் கையில் எடுத்தது. ஆனால் இப்பொழுது இது வட மாநிலங்களிலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி நீட் தேர்வு ஒழிக்க வேண்டும் என ஏற்று அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு பெருகி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கூறினார்.



மேலும், பகல் உணவு திட்டத்தை கொண்டு வந்ததே திராவிட இயக்கம் தான். தியாகராயர் காலத்தில் கொண்டுவரப்பட்டது ஆனால் இந்த திட்டத்தை முழுமையாக காமராஜர் கொண்டு வந்தார். பின்பு காலை உணவு திட்டம் திராவிட மாடல் ஆட்சி தலைவர் மு க ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார். குறிப்பாக காமராஜரின் பெருமையை ஊட்டும் வகையில் இன்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்திருக்கிறார்.


காலை உணவு திட்டம் உலகம் முழுவதும் பாராட்டப்படுவதோடு, பின்பற்றபடும் நிலைக்கு வந்துள்ளது மணிமகுடத்தின் ஒலி முத்தாக சேர்ந்யா திருக்கிறது. ஆனால் குற்றம் சொல்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு வழி தெரியவில்லை என்பது போல் பேசுகின்றனர். காமராஜரின் வீட்டிற்கு தீ வைத்தவர்கள் அவரின் முகமூடியை அணிந்து கொண்டு பேசுகிறார்கள். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள். அந்த முகமூடி கிழித்தெறியப்படும் என்றார்.


2020 புதிய கல்வி கொள்கையிலேயே காலை உணவு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அண்ணாமலைக்கு பதில் அளித்த கி.வீரமணி, அண்ணாமலை ஒரு அரைவேக்காடு. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போலத்தான் புதிய கல்விக் கொள்கையில் கொண்டு வந்து திட்டத்தை ஏன் அவர்களால் மாநிலங்களில் இதுவரை கொண்டுவர முடியவில்லை என கேள்வி எழுப்பியா அவர் எதையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்" என தெரிவித்தார்.