தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் முத்தரையர் கடற்கரை பகுதியில்  50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டுக்காரர் ஒருவர் சந்தேகப்படும்படியாக சுற்றி வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சுற்றிக்கொண்டு இருந்தவரை மடக்கி பிடித்து கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் இங்கிலாந்து பாஸ்போர்ட் மற்றும் இந்திய, இலங்கை பணமும் வைத்து இருந்தாராம்.

 

விசாரணையில், பிடிபட்டவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(வயது 47) என்பது தெரியவந்தது. இவர் இந்தியா வாழ் வெளிநாட்டினருக்கான, ஓ.சி.ஐ. என்ற அட்டை வைத்து இருந்தார். இவர் கோவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களுருக்கு வந்து உள்ளார். அங்கு இருந்து வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு கடந்த 9-ஆம் தேதி தூத்துக்குடிக்கு வந்து உள்ளார். தூத்துக்குடியில் உள்ள பிரபல ஓட்டலில்  தங்கி இருந்தாராம். பின்னர் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் உரிய அனுமதியின்றி இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தாராம். இதற்காக கடற்கரையில் நின்றபோது பிடிபட்டுள்ளார்.



கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ கேட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்து உள்ளனர். இந்த வழக்கில் ஜோனாதன் தோர்ன் கைது செய்யப்பட்டுள்ளார். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஜெயிலில் இருந்து உள்ளார். பின்னர் பரோலில் வெளியில் வந்து உள்ளார். இவர் இதுவரை 60 நாடுகளுக்கு சென்று இருப்பது தெரியவந்துள்ளது.

 

கைது செய்யப்பட்ட ஜோனாதன் தோர்ன் தனது ஆப்பிள் மொபைலின் பாஸ்வேர்டை தெரிவிக்காத நிலையில் அவர் யார் யாரை தொடர்பு கொண்டார் என்பது குறித்து விசாரணை செய்யவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள், மொபைலில் இருந்து யாரையெல்லாம் தொடர்பு கொண்டார் என கண்டறிவதில் சிக்கல் உள்ளதாகவும் விரைவில் மொபைல் ஆய்வு செய்யப்படும் என்றனர். இதைத் தொடர்ந்து கியூபிரிவு போலீசார் ஜோனாதன் தோர்ன் மீது பாஸ்போர்ட் முறைகேடு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜகுமரேசன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.