கடந்த (2020) ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து உலகை உலுக்கிவரும் கொரோனா வைரஸ், தற்பொழுது பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வர வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதாரத்துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். கொரோனா முதல் அலையில் அதிக அளவில் உயிர் சேதம் இன்றி சிறு பாதிப்புகள் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது கொரோனா தொற்று அலையில் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு, தமிழ்நாடு அரசும் அதனை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தமிழ்நாடு அரசும், மருத்துவர்களும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், வீட்டைவிட்டு வெளியே வரும்பொழுது முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் எனவும் நாள்தோறும் கூறிவருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஒரு சில அத்தியாவசியத் தேவைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிர்காக்கும் சேவையாற்றி வரும் மருந்து கடைகளுக்கு 24 மணிநேரமும் இயங்க சிறப்பு அனுமதி அளித்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது. 




கரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் காலை முதல் இரவு வரை பல்வேறு மருந்து கடைகளில் வரிசையாக நின்று தங்களுக்கும் , குடும்ப நண்பர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கிச் செல்கின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் அலையில் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வந்த "அம்மா மருந்தகம்" தற்போது தங்கள் பணியை தொய்வுடனே நடத்தி வருகிறார்கள் என பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். குறிப்பாக வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாள்தோறும் மாலை 6 மணியுடன், அம்மா மருந்தகத்தில் அடைத்து விடுகின்றனர். கரூர் மாவட்டத்தில் பல்வேறு மருந்துக்கடைகள் மக்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், கரூரில் உள்ள அம்மா மருந்தகம் தற்போது உள்ள நிலையில் மிகுந்த மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 




முன்னாள் முதலமைச்சர் சிறப்பு திட்டத்தில் ஒன்றான அம்மா மருந்தகம் பல்வேறு நிலைகளில் ஏழை ,எளிய மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கி வந்தன. 20% தள்ளுபடி விற்பனை செய்துவந்தனர். இந்நிலையில் ஏழை, எளிய மக்களுக்கு தகுந்தார் போல் விலையும், குறைவாக உள்ளதால் அதையே பொதுமக்கள் அம்மா மருந்தகத்தில் நாடி வருகின்றனர். கரூர் அம்மா மருந்தகம் நாளொன்றுக்கு 2 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டித் தந்த நிலையில் தற்போது உள்ள சூழ்நிலையில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து இருப்பதால் வருவாய் குறைப்பும் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள அம்மா மருந்தகம் தொடர்ந்து மக்கள் பணியை ஆற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 




உயிர்காக்கும் உன்னத பணியில் உள்ள அம்மா மருந்தகம் ஏழை ,எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இத்தகைய பணியை மீண்டும் தொய்வின்றி, வார விடுமுறை இன்றி, மக்கள் பணியாற்ற வரவேண்டும் என்பதே மாவட்ட மக்களின் வேண்டுகோளாக உள்ளது.  பின்னர் இதுகுறித்து செங்குந்தபுரத்தில் இயங்கி வரும் கூட்டுறவு மொத்த பண்டக சாலையின் மேலாளரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நாம் கேட்டதற்கு, "தாங்கள் கூறுவது போல் அம்மா மருந்தகம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் அடைக்கப்பட்டது. அதற்கு அங்கு பணியாற்றி வந்த பணியாளர்கள் சிலருக்கு காய்ச்சல் வந்ததால், அம்மா மருந்து கடை அடக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அம்மா மருந்தகம் கரூரில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை சுழற்சி முறையில் பணியாளர்களை கொண்டு அம்மா மருந்தகம் செயல்படும்” என விளக்கம் அளித்தார். பொதுமக்களின் நலனுக்காக தொடர்ச்சியாக அம்மா மருந்தகம் இனி விடுமுறை இன்றி செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.