இதுகுறித்துப் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:  


’’தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியிலும், கர்நாடகத்தின் கோலார் பகுதியிலும் செயல்பட்டு வரும் டாடா மின்னணு நிறுவனத்தின் ஆலைகளில் பணியாற்ற உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து 4000 பெண்கள் தேர்வு செய்யப்படவிருப்பதாக டாட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் வேலை கிடைக்காமல் வாடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் பிற மாநிலங்களிலிருந்து ஊழியர்களை இறக்குமதி செய்வது கண்டிக்கத்தக்கது.

உத்தரகாண்ட் மாநில திட்டக் குழுவிடம் டாடா குழுமம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய தொழில் பழகுனர் பயிற்சித் திட்டம், தேசிய தொழில் பழகுனர் ஊக்குவிப்புத் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலும், உத்தரகாண்ட் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் தாமி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக  டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.


டாடா நிறுவனத்திற்கு உரிமை இல்லை


உத்தரகாண்ட் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் டாட்டா நிறுவனத்தின் நோக்கத்தைக் குறை கூற முடியாது. அதே நேரத்தில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை இன்னொரு மாநிலத்திற்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்வதற்கு டாடா நிறுவனத்திற்கு உரிமையும் இல்லை.


தமிழக அரசு சலுகை வழங்க என்ன காரணம்?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள ஜி.எம்.ஆர் தொழிற்பூங்காவில்தான் டாடா மின்னணு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்காக டாடா நிறுவனத்திற்கு மானிய விலையில் 500 ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் டாடா நிறுவனத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மாறாக, டாடா மின்னணு நிறுவனம் தமிழ்நாட்டில் ஆலை அமைத்தால், அதன் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு அதிகரிக்கும்;  தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் வேலை கிடைக்கும் என்பதால்தான்.

ஓசூரில் டாடா மின்னணு நிறுவனத்தின் ஆலையை அமைப்பதற்காக அந்த நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் முந்தைய  அதிமுக ஆட்சியில் கையெழுத்திடப்பட்டது. அதன்படி, ரூ.4684 கோடியில் அமைக்கப்படும் டாடா மின்னணு ஆலையில் 18,250 பேருக்கு வேலை வழங்கப்பட வேண்டும். அவற்றில் குறைந்தது 80% வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டால், 14,600 வேலைகள் தமிழர்களுக்கு கிடைக்கும்; அதன் மூலம் அவர்களின் குடும்பங்கள் பொருளாதார தன்னிறைவு பெறும் என்பதுதான் இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்வதன் நோக்கம் ஆகும்.


தமிழகத்தை சுரண்டும் செயல்


ஆனால், அதற்கு மாறாக தமிழகத்திடமிருந்து சலுகைகளைப் பெற்றுக் கொண்டு வெளி மாநிலத்தவருக்கு வேலை வழங்குவது என்பது தமிழகத்தை சுரண்டும் செயலாகும். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஓசூர் டாடா மின்னணு ஆலைக்கு வெளிமாநிலத்திலிருந்து பணியாளர்கள் வரவழைக்கப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து 1800 பேர் ஓசூர் டாடா ஆலைக்காக தேர்வு செய்யப்பட்டனர். அப்போது அவர்களுக்கு மத்திய பழங்குடியினர் நல அமைச்சராக இருந்த அர்ஜுன் முண்டா தலைமையில் விழா எடுக்கப்பட்டு, ரயில் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தவருக்கு ஓசூர் டாடா ஆலையில் வேலை வழங்கப்படுவதை அப்போதே பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓசூர் டாடா ஆலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5500 பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆலை தொடங்கப்படும்போது ஆலையின் மொத்த வேலைவாய்ப்புகளில் 80% தமிழர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதாக டாட்டா நிறுவனம் தெரிவித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.


ஆனால், அன்றைய தேதி வரை டாடா ஆலையில், 1993 பேருக்கு மட்டும்தான் வேலை வழங்கப் பட்டிருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 80% வேலை வாய்ப்பு, அதாவது 14,600 வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்றால், அதன்பின் முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் வேலைக்கு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக, உத்தர்காண்டில் இருந்து பணியாளர்களை தேர்வு செய்வதன் மூலம் தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகளை டாட்டா மறுப்பது உறுதியாகியுள்ளது.


வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு

தமிழ்நாட்டில் அமைக்கப்படும் ஆலைகளில் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். ஆனால், டாட்டா நிறுவனத்திடம் பேச்சு நடத்தி, அந்நிறுவனத்தின் வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க உறுதி பெறப்பட்டிருப்பதாக தெரிவித்த தமிழக அரசு, அதை உறுதி செய்வதற்கு பதிலாக உத்தரகாண்ட்டில் இருந்து பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நலனை விட, தொழிலதிபர்களின் நலனைத்தான் தமிழக அரசு முக்கியமாக கருதுகிறது என்பதையே இது காட்டுகிறது.


திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75% தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாததற்கு தொழிலதிபர்கள் மீதான பாசம் காரணம் போலும்.

ஓசூர் டாட்டா மின்னணு ஆலைக்கு உத்தர்காண்ட் மாநிலத்திலிருந்து பணியாளர்கள் நியமிக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; டாட்டா ஆலையில் 80% பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் தனியார் நிறுவன வேலைகளில் 80% பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’’.


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.