தமிழ்நாட்டில் வருகிற 17ம் தேதி(திங்கட்கிழமை) அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 18-ஆம் தேதி தைப்பூசம் என்பதால் 17-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 17-ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி 29-ஆம் தேதி பணி நாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது. திட்டமிட்டபடி இன்று முதல் வருகின்ற ஜனவரி 13 ம் தேதி வரை சென்னையில் இருந்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பிற ஊர்களில் இருந்து 6,468 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம்,கோயம்பேடு ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்தில் இருந்து பொன்னேரி,கும்முடிப்பூண்டி,ஊத்துகோட்டை,ஆந்திரா செல்வோர் பயணம் செய்யலாம் என்றும், கே.கே.நகரில் இருந்து ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி,கடலூர்,சிதம்பரம் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம்,தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு பயணிக்கலாம் என்றும், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமல, புதுச்சேரி,கடலூர் போன்ற ஊர்களுக்கு பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.