தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு படுதிகளில் நடைபெறும். அதன்படி, இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும், அலங்காநல்லூரில் நேற்றும் நடைபெற்று முடிந்தது. மேல்குறிப்பிட்ட மூன்று இடங்களை தவிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு பல்வேறு பெயர்களில் நடத்தப்படுவது உண்டு.


காளைக்கு உணவாக உயிருள்ள சேவலை அளித்த கொடூரம்:


இந்த நிலையில், சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளையை கட்டாயப்படுத்தி சேவலை சாப்பிட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத மூன்று பேர் இணைந்து காளையை கட்டாயப்படுத்தி சேவலை மெல்ல வைக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


இந்த வீடியோவை, யூடியூபர் ரகு என்பவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, யூடியூபர் ரகுவுக்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். பீப்பிள் ஃபார் கேட்டில் எய்ம் இந்தியா (பிஎஃப்சிஐ) நிறுவனர் அருண் பிரசன்னா அளித்த புகாரின் அடிப்படையில், சேலம் மாவட்ட போலீஸார், விலங்குகள் வதை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து தாரமங்கலம் காவல்துறை ஆய்வாளர் கூறுகையில், "எப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். விசாரித்து வருகிறோம். நாங்கள் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை” என்றார். ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது, காளைகள், இம்மாதிரியாக துன்புறுத்தப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.


கொந்தளித்த விலங்குநல ஆர்வலர்கள்:


ஜல்லிக்கட்டில் காளையை வெற்றி பெற வைக்கும் நோக்கத்துடன் அதற்கு உணவாக கோழி அளிக்கப்படுகிறது என விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் உரிமையாளர்களுக்கு தங்க நாணயங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. 


வெற்றி பெறும் காளைகளுக்கு சந்தையில் அதிக கிராக்கி ஏற்பட்டு அதிக விலை கிடைக்கும் என்றும் அவை இனப்பெருக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன என்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


 






இதுகுறித்து பிஎஃப்சிஐ அமைப்பின் நிறுவனரும் புகார்தாரருமான அருண் கூறுகையில், "காளைகளுக்கு உணவாக உயிருள்ள சேவலை அளித்து இரண்டு விலங்குகளையும் கொடுமைப்படுத்துகின்றனர். காளை ஒரு தாவரவகை விலங்கு. அதற்கு கோழியை உணவாக அளித்து கட்டாயப்படுத்துவது கற்பனை செய்ய முடியாதது. எனது ஒரே பயம் இது ஒரு மோசமான போக்கை மாறிவிடும் என்பதுதான். இந்த காளை வென்றால், பல காளை உரிமையாளர்கள் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள்" என்றார்.