சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் துணைவேந்தராக ஜெகநாதன் கடந்த 2021 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். இவர் பதவியேற்ற பிறகு பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள், பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகன்நாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகளை இயக்குனார்களாக கொண்ட பூட்டர் ஃபவுண்டேஷன் என்ற கல்வி நிறுவனத்தை தொடங்க சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது. இந்த நிறுவனம் தன்னிச்சையாக செயல்படுவதுடன், பல்கலைக்கழக வளங்களை தனியாருக்கு தாரை பார்ப்பதாக சர்ச்சை எழுந்தது. இதைத்தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரும், முன்னாள் பேராசிரியர் இளங்கோவன் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு புகார் அனுப்பியுள்ளார்.



அதில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் சரிவர இயங்கவில்லை. சிண்டிகேட் அனுமதி இல்லாமல் துணைவேந்தர் சமீபத்தில் தொடங்கிய நிறுவனத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதியை முதலீடு செய்துள்ளார். இதனால் பல்கலைக்கழகத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டபோது சாதி ரீதியாகவும், ஆபாசமாகவும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இதன் அடிப்படையில் கடந்த மாதம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுதல், கூட்டு சரி செய்தல், மோசடி செய்தல், ஆவணங்களை போலியாக தயாரித்தல், அரசு ஊழியராக இருந்து கொண்டு ஏமாற்றுதல், குற்றம் செய்ய முயற்சி செய்தல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய எட்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகன்நாதனை கைது செய்த கருப்பூர் காவல்துறையினர் அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் இரவு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்கு பிறகு நள்ளிரவு 12.30 மணிக்கு சேலம் இரண்டாவது நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் வீட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், துணைவேந்தர் ஜெகநாதன் ஏழு நாட்கள் சேலம் மாநகர் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், காவல்துறையினர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நிபந்தனை ஜாமின் அடிப்படையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு முறை சேலம் மாநகர காவல் துறை பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில் இன்று பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில் அரசு நிதியில் முறைகேடு நடந்துள்ளதா என சிறப்பு தணிக்கை குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே காவல் துறையினர் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் புகாருக்குள்ளானவர்கள் தொடர்புடைய இடங்களில் 2 கட்டங்களாக சோதனை நடத்தி முறைகேடு புகார் தொடர்பான பல்வேறு ஆவணங்களை சேகரித்தனர்.


இந்த நிலையில் தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன் பொறுப்பேற்றது முதல் தற்போது வரையிலான அனைத்து பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும் தமிழ்நாடு அரசின் சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். உள்ளாட்சி தணிக்கை துறை துணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.