உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டிகளில்  சிந்தாமணி அக்கா காளை களமிறங்குகிறது என்றாலே தனிச்சிறப்புதான். காளையால் மட்டுமே இந்த தனிச்சிறப்பு அல்ல. காளையை களமிறக்கும் சிந்தாமணியாலும்தான். ஆம். ஆண்கள், பெண்கள் என பலரும் தாங்கள் வளர்க்கும் காளைகளை களத்தில் இறக்கி இளைஞர்களுடன் மோதவிடும் தருணத்தில், திருநங்கையாக களத்தில் தனது காளைகளை களமிறக்குபவர் சிந்தாமணி. இதன்காரணமாகவே, சிந்தாமணியின் காளைக்கு தனிச்சிறப்பு.




30 வயதான சிந்தாமணிக்கு சொந்தமான 9 வயதான அக்னிகருப்பு, 4 வயதான பாண்டிமுனி ஆகிய இரு காளைகள் இன்றைய போட்டியில் பங்கேற்றுள்ளன. இதுதொடர்பாக, சிந்தாமணி தனியார் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,


“கல்லணையில் உள்ள எனது வீட்டில் இருந்து நான் வெளியேற்றப்பட்டபோது எனது எதிர்காலம் குறித்தும், எங்கே சென்று வாழ்வது என்றும் தெரியாமல் இருந்தேன். மதுரையில் ஒரு திருநங்கையை சந்தித்தேன். மக்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்தேன். மக்கள் என்னை ஏளனமாக பேசினர். ‘கை கால்கள் நன்றாகதானே உள்ளது. ஏன் பிச்சை எடுக்கிறாய்?’ என்று கேட்டனர். அப்போது முதல் பிச்சை எடுப்பதை நிறுத்தினேன். கட்டிட வேலைக்கு சென்றேன். மூன்று ஆண்டுகள் கட்டிட வேலைக்கு சென்று போதியளவு பணம் சேர்த்து எனது முதல் காளைமாடு கன்றுக்குட்டியாக இருந்த நிலையில் வாங்கினேன். இந்த சமூகத்தில் அதிகாரம் மற்றும் மதிப்பு பெறுவதற்கான எனது பயணம் இப்படித்தான் தொடங்கியது


கடந்த 7 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் என்ற அடிப்படையில் பல கவுரவங்களை பெற்றுள்ளேன். இந்த சமூகம் என்னை மதிப்பதற்கு எனது காளைகளான அக்னி கருப்பு, ராமு மற்றும் பாண்டிமுனி பெரும்பங்கு வகிக்கிறது.




மதிப்பான வாழ்க்கையை நாம் வாழ எதிர்கொள்ளும் தடைகளை மக்கள் ஒருபோதும் அறியமாட்டார்கள்.  ஏழு ஆண்டுகளக்கு முன்பு எனது காளைகளுடன் முதன்முறையாக நான் பாலமேடு ஜல்லிக்கட்டிற்கு சென்றபோது நான் அவமானப்படுத்தப்பட்டேன். ஆனால், அந்த போட்டியில் எனது காளைகளை யாரும் அடக்க முடியாமல் இருந்தபோதுதான் எனது கவலைகள் அனைத்தும் துடைக்கப்பட்டது. இவை அனைத்தும் அவர்கள் அளிக்கும் பரிசுக்காகவும், பணத்திற்காகவும் அல்ல. இவை அனைத்தும் மரியாதைக்காகவே.”


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தற்போது மதுரை வாடிவாசலில் திருநங்கை சிந்தாமணி அக்கா காளை வருது பாரு என்று மைக்கில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கூறும்போது, அக்னி கருப்பு, பாண்டி முனி காளைகள் களத்தில் சீறிப்பாய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண