ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள், பெயர் குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, தயாரிப்பாளர் ஞானவேல், அமேசான் நிறுவனத்திற்கு எதிராக வன்னியர் சங்கத்தின் சார்பில் சிதம்பரம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


சிதம்பரம் நீதிமன்றத்தில் தாக்கல், வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,


“ 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்துள்ள ஜெய்பீம் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை லட்சக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் பார்த்துள்ளனர். இந்த படம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றிய உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தில் காவல்துறை விசாரணையில் நடைபெறும் கொடுமைகள், மனித உரிமைகள் மீறல் குறித்தும் பேசப்பட்டுள்ளது.




இந்த படத்தில் பெரும்பாலும் கதாபாத்திரங்கள் உண்மையான பெயர்களிலே இடம்பெற்றுள்ளது. ராஜகண்ணு கதாபாத்திரம் ராஜகண்ணு என்ற பெயரிலும், வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரம் வழக்கறிஞர் சந்துரு என்ற பெயரிலும், காவல் அதிகாரி பெருமாள்சாமி என்ற கதாபாத்திரம் பெருமாள்சாமி என்ற பெயரிலும் காட்டப்பட்டுள்ளது. ஆனால், உண்மை சம்பவத்தில் தொடர்புடைய, பாதிக்கப்பட்டவர்களை காவல்நிலையத்தில் கொடூரமாக தாக்கி கொடுமைப்படுத்திய காவல் ஆய்வாளர் பெயர் அந்தோணிசாமி என்ற கிறிஸ்தவ பெயர் மாற்றப்பட்டுள்ளது.


ஒருகாட்சியில் கொடூர தாக்குதல் நடத்தும் காவல் ஆய்வாளரின் பின்புறம் வன்னியர் சங்கத்தின் காலண்டர் இடம்பெற்றுள்ளது. அக்னி குண்டத்துடன் இடம்பெற்றுள்ள அந்த காலண்டரில் ஷத்திரிய குல மாநாடு, விழுப்புரம் என்று இடம்பெற்றுள்ளது. இது வன்னிய சங்க உறுப்பினர்களையும், ஒட்டுமொத்த வன்னிய சங்கத்தையும் இழிவுபடுத்த வேண்டும் என்ற படக்குழுவினரின் நோக்கத்தை தெளிவாக காட்டுகிறது.




படத்தில் காவல் ஆய்வாளருக்கு வேண்டுமென்று வைக்கப்பட்டுள்ள குரு என்ற பெயர், வன்னியர் சங்கத்தின் முன்னணி தலைவரான குருவை குறிக்கிறது. படக்குழுவினர் படத்தில் வன்னியர்களை பொல்லாதவர்களாக, தவறு செய்பவர்களாக, வன்னியர் சமூகத்தினரென்றாலே தவறான, சட்டத்திற்கு புறம்பான செயல் செய்பவர்களாக காட்சிப்படுத்தியுள்ளனர். ஆனால், உண்மை சம்பவத்தில் அந்த காவல் ஆய்வாளர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர் கிடையாது.


படத்தில் காவல் ஆய்வாளர் வீட்டில் முக்கியமாக காட்டப்படும் வன்னியர் சங்கத்தின் காலண்டர் மூலமாக, வன்னியர் சங்கத்தை இழிவுப்படுத்த வேண்டும், வன்னிய சமுதாயத்தை சேதப்படுத்த வேண்டும் என்ற படக்குழுவின் தவறான எண்ணம் வெளிப்படுகிறது. இது இயல்பாகவோ, அப்பாவித்தனமாகவோ, தவறுதலாகவோ நடைபெற்றதாக எண்ண முடியாது. வன்னிய சமுதாயத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலே எடுக்கப்பட்டுள்ளது.




இந்த படத்தை பார்ப்பவர்களும், பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வன்னிய சமுதாயத்தை தவறாக எண்ண வேண்டுமென்று இவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது.  கடந்த 2-ந் தேதி வெளியான இந்த படத்தை லட்சக்கணக்கான மக்கள் இதுவரை பார்த்துள்ளனர். பல தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த பின்னர், அந்த காலண்டரை மட்டும் படக்குழுவினர் மாற்றியுள்ளனர். ஆனாலும், மக்களின் பார்வையில் வன்னிய சமுதாயத்தினவர் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர்.


இதுதொடர்பாக, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் காவல் ஆய்வாளரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், உயர்நீதிமன்றம் இந்த படத்தின் மீதும், அவர்கள் மீதும் 153, 153 ஏ(1), 499, 500, 503, 504 மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.