சென்னை புறநகர் மின்சார ரயில்களில் சோதனை அடிப்படையில் ஏசி ரயில் பெட்டிகளை இணைத்து இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நித்தம் நித்தம் மக்கள் ஒரு இடட்தில் இருந்து வேறு இடத்திற்கு செல்வதற்கு புறநகர் ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் சிரமமின்றி பயணிக்க ரயில்வே துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


அந்த வகையில் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிகள் வசதிக்கு ஏசி ரயில் பெட்டியை இணைக்குமாறு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ரயில்வேக்கு பரிந்துரை செய்திருந்தது. அதன்படி சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இரண்டு முதல் மூன்று ஏசி பெட்டிகளை இணைத்து சோதனை முறையில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.


சென்னை பெரம்பூர் ஐ சி எப் தொழிற்சாலையில் ஏற்கனவே மும்பை புறநகர் மின்சார ரயிலுக்காக ஏசி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் ஐ சி எப் மூலமாகவே சென்னை புறநகர் மின்சார ரயில் ஏசி பெட்டிகளை இணைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.  சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிகளுக்கான வசதியை அதிகப்படுத்தும் வகையில் ஏசி பெட்டிகளை இணைக்க ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது.


இது ஒருபக்கம் இருக்க கடந்த இரண்டு நாட்களாக பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. அக்டோபர் 1 மற்றும் 2 ஆம் தேதி விடுமுறை நாட்கள் என்பதால் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது அதன்படி கடந்த இரண்டு நாட்கள் 41 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று முதல் வழக்கம்போல் சென்னை புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.