Israel War: இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பதற்றத்தில் இஸ்ரேல்:
பாலஸ்தீன குழுக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும் இஸ்ரேல் மீது பாலஸ்தீன குழுக்கள் தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தெற்கு இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலை நடத்திய ஹமாஸ் படைகள் மீது போரை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, உக்ரைன் போர் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் அறிவித்துள்ள போர் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. முதலில், இன்று காலை இஸ்ரேல் மீது ஹமாஸ் படை ராக்கெட் தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி அளிக்கும் விதமாக காசாவில் உள்ள ஹமாஸ் படை மீது தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்:
இதுவரை இல்லாத அளவுக்கு தெற்கு இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக ஹமாஸ் குழு தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால், 2,500 ராக்கெட்டுகளை கொண்டு மட்டுமே தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறுகிறார்.
இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ’Operation Iron Swords' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையேயான மோதலில் பல்வேறு மேற்கத்திய நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் என்று தெரிகிறது. இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போர் உச்சமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். உள்ளூர் அதிகாரிக்கும் விடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்” என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சிக்கியுள்ளார்களா தமிழர்கள்?
மேலும், இஸ்ரேலில் தமிழர்கள் சிலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 15 பேர் அயலக தமிழர் நலவாரியத்தை தொடர்பு கொண்டுள்ளளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 15 பேரும் இஸ்ரேலில் ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணிபுரிந்து வருவதாகவும், 15 பேரும் பாதுகாப்பாக இருந்தாலும் போர் தீவிரமடைவதால், தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. மேலும், அயலக தமிழகர் நலவாரியத்தை தொடர்பு கொண்டால் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பதோடு, உதவி எண்களையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு வசிக்கும் தமிழர்கள் தமிழக அரசை தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. +91-87602 48625, +91-99402 56444, +91-96000 23645 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற இணையதளங்களின் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.