ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குருவுக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக டெல்லி அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 17ஆம் தேதி சத்குருவுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் குணமாகி வருகின்றார்” என தெரிவித்துள்ளனர். 


 






கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் தலைவர் சத்குரு , தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவருக்கு சிறிது காலமாகவே ஒற்றை தலைவலி இருந்து வந்துள்ளது. கடந்த 14ம் தேதி அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டதோடு, அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டு, கடுமையான வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பாதுகாவலர்கள் அவரை உடனடியாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது, மூளையின் ஒருபகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். மூளை நரம்பியல் நிபுணர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் இருந்த ரத்தக்கசிவை சரி செய்தனர். இதையடுத்து வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த சத்குரு, தற்போது வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு விரைவாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் எஸ்.வி.சேகர் உட்பட பிரபலங்களும், ஈஷா பக்தர்களும் சத்குரு விரைவில் குணமடைய தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.