அரசாணையை அரசே அவமதிக்க கூடாது என்றும்  ஊரக வளர்ச்சி கணினி உதவியாளர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


’’பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வரும் கணினி உதவியாளர்கள் அறப்போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் உண்ணாநிலை போராட்டம், மண்டல அளவில் காத்திருப்பு போராட்டங்களை நடத்தியும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு சார்பில் பேச்சு நடத்தப்படாதது வருத்தமளிக்கிறது.


தமிழ்நாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அத்திட்டம் சார்ந்த புள்ளிவிவரங்களைப் பதிவு செய்வதற்காக ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தலா இருவர் வீதம் கணினி உதவியாளர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை; அவர்களின் பணி தகுதிக்கேற்ப ஊதியமும் வழங்கப்படவில்லை.


4 எளிமையான கோரிக்கைகள்


பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும், இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம்  நிர்ணயிக்கப்பட வேண்டும், சமூகப் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும், பணியின்போது உயிரிழந்த கணினி உதவியாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியும், கருணை அடிப்படையில் வேலையும் வழங்க வேண்டும் ஆகியவைதான் இவர்கள் வலியுறுத்தி வரும் 4 கோரிக்கைகள் ஆகும். இவர்களின் கோரிக்கைகள் எளிமையானவை; அவற்றை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை.


கணினி உதவியாளர்கள் அனைவரும் அரசுத் துறைகளுக்கு நிரந்தரப் பணியாளர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்களோ, அதே முறையில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்கள். இவர்களின் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகள் செம்மையாக கடைபிடிக்கப்பட்டிருக்கின்றன. அனைவருமே 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகின்றனர். அதனால் இவர்களைப் பணி நிரந்தரம் செய்வதில் எந்த விதிமீறலும் ஏற்படாது என உறுதியாக கூறலாம்.


கணினி உதவியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான நடைமுறைகள் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டன என்பதும், ஆனாலும் இன்னும் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதும் கவலையளிப்பவை ஆகும். ஊரக வளர்ச்சித் துறை இயக்குனரின் 24.05.2013ஆம் தேதியிட்ட நடைமுறைகள் மூலம் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான பட்டியல் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கோரப்பட்டது. ஆனால், அந்த நடைமுறை முழுமையடையவில்லை. 




6 ஆண்டுகள் ஆகியும் செயல்படுத்தப்படாத அரசாணை


அதன்பின் 22.03.2017ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அரசாணை எண் 37-ன்படி 5 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாகப் பணியாற்றியிருந்த, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்கப்பட்ட 906 கணினி உதவியாளர்களையும்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தி ஊரக வளர்ச்சித் துறையில் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பின்  சுமார் 6 ஆண்டுகள் ஆகும் நிலையில் இன்று வரை அந்த அரசாணை செயல்படுத்தப்படவில்லை.


பணி நிரந்தரம் செய்யப்படும் வரை கணினி உதவியாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பரிந்துரைத்தும் கூட அது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இந்தியாவின் மிகச்சிறந்த வறுமை ஒழிப்புத் திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தான். இத்திட்டத்தின் முதுகெலும்பாக பணியாற்றுபவர்கள் கணினி உதவியாளர்கள்தான். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியில்  6% நிர்வாகச் செலவுகளுக்கானது என்பதால் இவர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படாது. எனவே, அரசாணை எண் 37இன்படி கணினி உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.


இவ்வாறு அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.