அதிரடி.. எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்: ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு இன்று தொடங்கிய நிலையில், மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்பு இன்று தொடங்கி உள்ள நிலையில், சீனியர் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்டக் கலந்தாய்வு அக்டோபர் மாதத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில் அரசு இட ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர்ந்தனர். அதேபோல், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்ற மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர்.

இன்று முதல் வகுப்புகள்

இந்த நிலையில்  நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 2022- 23 ஆம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று (நவ.15-ம் தேதி) தொடங்கப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் வகுப்புகள் இன்று தொடங்கி உள்ளன.

முதல் நாளான இன்று முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. கல்லூரிகளில் ராகிங்கைத் தடுக்க, பேராசிரியர்கள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

முதல் சுற்று கலந்தாய்வில் நிரம்பாத 44 இடங்கள் மற்றும் முதல் சுற்றில் மருத்துவ இடங்களை உறுதி செய்தவர்கள் கல்லூரிகளில் சேராததால் ஏற்படும் காலியிடங்கள் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வு ஆன்லைன் மூலம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 

பல் மருத்துவப் படிப்புகள் எப்போது?

எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், பிடிஎஸ் வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்திய பல் மருத்துவக் கவுன்சில் அறிவித்த பின், அரசு, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ராகிங் சர்ச்சை

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி), இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள், 40-க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்ததாக வீடியோ ஒன்று வெளியானது. இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தொடர்பாக இறுதி ஆண்டு மாணவர்கள் 7 பேரைக் கல்லூரி நிர்வாகம், இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. 

கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் இடை நீக்கம் செய்யப்பட்ட 7 மாணவர்கள் மீதும் தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

’ஒழுக்கம் இல்லாமல், மாணவர்கள் தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை’

இந்த விவகாரம் குறித்துத் தாமாக முன்வந்து விசாரணை செய்த சென்னை உயர் நீதிமன்றம், "கல்வி நிறுவனங்களில் ஒழுக்கம் என்பது முக்கியம். ஒழுக்கம் இல்லாமல், மாணவர்கள் தங்கப் பதக்கமே பெற்றாலும் பயனில்லை" என்று கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரம் குறித்து எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola