அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மூத்தத் தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் சேர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, " அரசியல் கட்சியில் யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது. நடந்தால் மட்டும் தான் பதிலளிக்க முடியும். பாரத பிரதமரின் சித்தாந்தங்களையும், தமிழக அரசியலில் நல்ல மாற்றம் கொண்டு வரவேண்டும் என எண்ணுவார்கள் யாராக இருந்தாலும் பாஜகவில் இணையலாம். பாஜகவில் இணையும் தலைவர்கள் அனைவரும் தேசிய நலன் சார்ந்த விஷயங்களில் முன்னுரிமை கொடுக்கின்றனர்.
அரசியலில் ஒரே இடத்தில் பணி செய்யவேண்டும் என்ற அவசியம் யாருக்கும் கிடையாது. கட்சிக்குள் தங்களுக்கு பிரச்சனைகள் வரும்போதும், மக்களுக்கு பணி செய்யமுடியாத சூழல் வரும்போதும் பாஜகவில் இணைகின்றனர். அவர்களுக்கு, வாய்ப்பு அளிக்க தமிழக பாஜக எப்போதும் தயாராக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் செய்தி மற்றும் சிறப்புப் பணிகள் செயலாக்கத் துறை அமைச்சராக பணியாற்றினார். மீண்டும் 2016 ஆண்டு சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மீண்டும் தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பிளவிபிட்ட பின்புதான் ராஜேந்திர பாலாஜி அநேக வெகுஜன மக்களுக்கு தெரிய வந்தார். எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த அவர், பாஜகவின் கருத்தை பிரதிபலிக்கும் விதமாக பேசி வந்தார்.
உதாரணமாக, கடந்த 2019-ஆம் ஆண்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அம்மா என்ற ஆளுமை இருக்கும் போது, எடுக்கப்பட்ட நிர்வாக முடிவுகள் என்பது வேறு, அம்மா ஆளுமை இல்லாத இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தான் எங்கள் டாடி... ஒட்டுமொத்த இந்தியாவின் டாடி" என்று தெரிவித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பாஜகவின் கைப்பாவையாக அதிமுக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ராஜேந்திரா பாலாஜியின் இந்த கருத்து மிகப்பெரிய அரசியல் சர்ச்சையாக உருவெடுத்தது. மேலும், பெரியார் பற்றிய ரஜினிகாந்த் கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், " ரஜினிகாந்த-ஐ அவமதிக்கும் செயலை அவரின் ரசிகர்கள் எப்படி பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார். மேலும், இந்துமதம் என்ன கிள்ளுக்கீரையா? அதிமுகவுக்கு வாக்கு செலுத்தாத இஸ்லாமியர்களுக்கு நாங்கள் ஏன் உதவி செய்ய வேண்டும்? போன்ற கேள்விகள் மூலம் வகுப்புவாதத்தையும் தூண்டினார்.
திமுகவின் ஹிட்லிஸ்டில் இருந்த அவர், கடந்த 2021ம் அண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் படுதோல்வி அடைந்தார். இதனையடுத்து, கடந்த காலங்களில் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமடைந்தது. முன்னதாக, ராஜேந்திர பாலாஜி மீதான புகாரில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்திருந்தது.
சில தினங்களுக்கு முன்னதாக இவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "முந்தைய காலங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து சில தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து அரசியலில் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகின்றேன்" என்று தெரிவித்தார்.
மேலும், வாசிக்க:
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை