காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ரெட்மீ தனியார் செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து, பெங்களூரு அருகே உள்ள ஒசக்கோட்டையில் உள்ள அந்த நிறுவனத்தின் குடோனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த செல்போன்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி புறப்பட்டுச் சென்றது. சுரேஷ் என்ற டிரைவர் அந்த லாரியை ஓட்டிச் சென்றார். அவருடன் கிளீனராக இளைஞர் ஒருவர் உடன் சென்றார்.
அந்த லாரி தமிழ்நாட்டை தாண்டி, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் தேவரசமுத்ரா பகுதியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் லாரி சென்றுக்கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த வழியாக காரில் வந்த ஒரு கும்பல், லாரியை வழிமறித்து நிறுத்தியது. காரில் இருந்து இறங்கிய அந்த கும்பலின் கைககளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப்பார்த்த டிரைவரும், கிளீனரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அந்தக் கும்பல் டிரைவர் சுரேஷையும், கிளீனரையும் தாக்கி கை, கால்களை கட்டி போட்டனர். கன்டெய்னரில் இருந்த லாரியை வழிமறித்து ஆறரை கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. சினிமா பாணியில் எல்லாம் வேகமாக நடைபெற்றுள்ளது.
நேற்று அதிகாலை அந்த வழியாக வந்த அந்தப் பகுதி மக்கள், மரத்தில் கட்டிப்போடப்பட்ட இருவரையும் கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர்களை மீட்டனர்.இதன் பின்னர், இருவரும் அங்குள்ள முல்பாகல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதேபோல், கடந்தாண்டு அக்டோபர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சூளகிரி அருகே 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பைக்கு செல்போன்களை ஏற்றிச்சென்ற கண்டெய்னர் லாரியை, ஒசூர் அருகே உள்ள மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்து ஒரு கும்பல் செல்போன்களை கொள்ளையடித்து சென்றது.
அதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் காஞ்சிபுரத்திலிருந்து மும்பைக்கு சென்ற கண்டெய்னர் லாரியை மர்மநபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி, ரூ.7 கோடி மதிப்புள்ள செல்ஃபோன்களை திருடினர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 10 மேற்பட்டோர் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இவ்வாறு திருடப்பட்ட செல்போன்கள் சர்வதேச மாஃபியா கும்பல் உதவியுடன் பங்களாதேஷ், நேபாள் உள்ளிட்ட நாட்டிற்கு கடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திருடப்படும் செல்போன்களை கை மாற்றி விடுவதற்கு சர்வதேச தொடர்புகளை துபாயை சேர்ந்த ஒருவர் இதுபோன்ற கொள்ளையர்களுக்கு உதவி வருவது விசாரணையில் தெரியவந்தது. அவரை கைது செய்வதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் கொள்ளையடிக்கப்படும் செல்போன்கள் வெளிநாட்டுக்கு எவ்வாறு செல்கிறது என்பது குறித்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வெளியில் செல்லாமல் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த செல்போன் நிறுவனங்களிடம் இருந்து 30 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மொபைல் நிறுவனத்தின் கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள மொபைல்ஃபோன்கள், இது போன்று அடிக்கடி கொள்ளை போவது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுத்திள்ளது. மேலும் மொபைல் கம்பெனியின் உள்ளே யாரோ ஒரு சிலர் இந்த கொள்ளை கும்பலுக்கு உதவி செய்திருக்கலாம், என சந்தேகம் வலுவாக உள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.