தமிழகத்தில் வாக்குப்பதிவிற்கு இன்னும் 3 நாட்களே உள்ள, தேர்தல் பறக்கும் படைகள் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, அண்ணாநகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மோகன், அரவக்குறிச்சியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.




இந்த நிலையில், சிவகாசியில் உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பரான சீனிவாசன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை சோதனையை முன்னிட்டு, அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.




கடந்த சில தினங்களுக்கு முன்பு, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவனுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது ரூ.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.