பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களின் உயிர் காப்பதில் மத்தியில் ஆளும் அரசுக்கு இருக்கும் அக்கறை. மாநில அரசுகளுக்கும் இருக்க வேண்டும். தமிழக நிதியமைச்சரோ மத்திய அரசின் திட்டமிடல் இல்லாத செயல்பாடே கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு காரணம் என பொய் பரப்புரையாற்றுகிறார். மாநிலங்கள் இல்லாமல் மத்திய அரசு இல்லை என்கிறார். மத்திய அரசு வேண்டியவர், வேண்டாதவர் என அரசியல் செய்வதாக சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்கள் கூறியதுபோல் மத்திய அரசோடு இணக்கமான போக்கை கடைபிடித்து மாநிலத்துக்கு பெரும் நன்மைகளை கொண்டுவாருங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே. உங்கள் அமைச்சர்களுக்கு மத்திய, மாநில அரசுகளிடையே நல் உறவு இருப்பின் மட்டுமே மக்கள் நலன் காக்க முடியும் என அறிவுறுத்துங்கள். இந்த இக்கட்டான சூழலில் மக்களை காக்க தேவையான செயல்பாடுகள்தான் முக்கியம் என உணர்த்துங்கள். இது அரசியல் செய்வதற்கான நேரமில்லை என்று எடுத்துரையுங்கள் உங்கள் சக அமைச்சர்களுக்கு. மக்கள் நலன் ஒன்றையே கவனத்தில் கொள்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறுகையில், “இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி மத்தியில்தான் அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. மத்திய அரசை எதிர்பார்த்துத்தான், மாநிலங்களுக்கான வளர்ச்சிப் பணிகளை செய்ய வேண்டியுள்ளது. அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி மத்திய அரசுடனுடன் அனுசரனையாக நடந்துகொண்டது. அன்றைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை மத்திய அரசுக்கு அடிபணிந்து கிடக்கிறது என்றார். தனக்கு தலைவலி வந்தால் தெரியும் என்பதைப்போல, ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம், அறிக்கை மூலம் வேண்டுகோள் தான் வைக்கிறார். இதைத்தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் செய்தார். முதலமைச்சரான பின்னர் ஸ்டாலின் நிலைமையை புரிந்து கொண்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறார். கொரோனா மருந்து, தடுப்பூசிக்கு மத்திய அரசின் கையைத் தான் எதிர்பார்த்து இருக்கிறோம். எனவே மத்திய அரசை அனுசரித்துப் போவது மாநிலத்தின் நன்மைக்காகத்தான். எனவே பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனின் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். அதுதான் எதார்த்த உண்மையும் கூட. மத்திய அரசிடம் இருந்து முடிந்தளவு நிதி மற்றும் உதவிகளை பெறுவது தான் புத்திசாலித்தனம்” என அவர் தெரிவித்தார்.
இந்த அறிக்கை குறித்து திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரச்சன்னா கூறுகையில், “மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மை உடன் நடந்து கொள்கிறது. இணக்கமாக சென்றால் தான் நாங்கள் செய்வோம் என்பது பெரியண்ணன் மனப்பான்மை. இது மற்ற மாநிலங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்கிற எண்ணவோட்டத்தின் வெளிப்பாடு. மத்திய அரசு தொற்று எண்ணிக்கை குறைவாக உள்ள குஜராத்திற்கு தடுப்பூசி அதிகபட்சமாகவும், தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள தமிழ்நாட்டிற்கு குறைவாகவும் தருகிறது. மத்திய அரசு சுயநலத் தேவைகளுக்காக ஒரு சில திட்டங்களை செயல்படுத்துகிறது. மற்றபடி தமிழ்நாட்டை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கிறார்கள். நிதி, மருந்து, மருத்துவமனை, ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை தராமல், பொறுப்புகளை மத்திய அரசின் அதிகார கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டுமென்ற அதிகார வெறிதான் இருக்கிறது.
அதிமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து எவ்வளவு திட்டங்களை பெற்றுத்தந்தது? மாநில உரிமைகளை தான் பறிகொடுத்தது. எதையும் கேட்டுப் பெற திராணி இருக்கவில்லை. மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு சரியாக செயல்படுவதில்லை. பாஜகவின் அதிகார துஷ்பிரயோகங்களை, ஜனநாயகப் படுகொலைகளை எதிர்த்து நாங்கள் கேள்வி கேட்பதால், கோவம் வருகிறது. ஜிஎஸ்டி பணத்தை ஏன் கொடுக்கவில்லை என்ற தமிழ்நாடு நிதியமைச்சரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல், திசை திருப்ப பாஜக மாநில தலைவர் முருகன் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்” எனக் காட்டமாக தெரிவித்தார்.
மூத்த பத்திரிகையாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், “மத்திய அரசோடு, மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும் என்பது ஒரு பொதுவான அணுகுமுறை. ஏனெனில் அது மக்களுக்கு நலன் தரக்கூடியது. மத்திய அரசு, மாநில அரசு இரண்டிலும் ஆட்சி புரிபவர்கள் அரசியல்வாதிகள்தான். வெவ்வேறு அரசியல் கட்சியாக இருக்கும்போது, அவர்களின் அரசியல் நலன் சார்ந்து தான் நகர்வுகள் இருக்கும். யாராக இருந்தாலும் அரசியலை தவிர்த்து ஆட்சி நகர்வுகளை செய்வதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
திமுக மத்தியில் உள்ள பாஜகவிற்கு எதிர்தரப்பை சார்ந்தவர்கள். இருவருக்கும் அடிப்படையில் பல வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் ஒரு மித்த செயல்பாடுகள் மக்களுக்கு நன்மை தரும். தமிழ்நாடு நிதியமைச்சரின் கருத்துகள், புதிய கருத்துக்கள் இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்டவை தான். இப்போது வேறு ஒரு கோணத்தில் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு இதை விட கட்டமான கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. இது இப்படியே தொடராது. மூத்த அரசியல்வாதிகள் இரண்டு கட்சிகளிலும் உள்ளதால், சரியாக கையாளுவார்கள். இரண்டு அரசுகளும் ஒரே திசையை நோக்கி பயணிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என அவர் தெரிவித்தார்.