தமிழகத்தில் முதல் முறையாக, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் விநியோகம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் அமைச்சர் சக்கரபாணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் நியாய விலை கடையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் பொது விநியோகத் திட்ட அங்காடிகளில், கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் விநியோகம் அறிமுகப்படுத்த கூடிய திட்டம் சென்னை மற்றும் அரியலூர் மாவட்டம் என இரண்டு இடங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி: பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் பெறுவதில் சிரமம் இருக்கிறது என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து தமிழகத்தில் முதல்முறையாக கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரிச்சாத்த முறையில் இந்த திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றால் இது முழுமையாக அமல்படுத்தப்படும். கேரளா தெலுங்கானா, அசாம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முழுமையாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் பொது மக்களுக்கு இந்த திட்டம் பயன்பெறும் வகையில் இருந்தால் விரைவில் தமிழக முழுவதும்  அமல்படுத்தப்படும். குடும்ப அட்டை வழங்குவதில் எவ்வித தேக்கமுமில்லை. கடந்த 15 மாதம் திமுக ஆட்சியில் 13 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டைகள் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வழங்கப்பட்டு இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக நியாய விலைக் கடைகளில் சர்க்கரை வழங்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், இது தொடர்பாக முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.