கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  சர்வதேச மனித உரிமைகள் நாள் உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்  தலைமையில் ஏற்றுக் கொள்ள அனைத்து துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டார்கள்.




இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி,  அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில். நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு. நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என அனைத்து துறை அலுவலர்களுடன் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்  உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம. லியாகத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.தண்டயுதாபாணி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு. சைபுதீன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.ரூபினா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.




விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடி பயிற்சி .


கீழவெளியூரில் விவசாயிகளுக்கான காய்கறி சாகுபடி மேலாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த பத்து நாள் இலவச பயிற்சி தொடங்கப்பட்டது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழவெளியூரில் தமிழ்நாடு அரசு ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் கீழ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கான காய்கறி சாகுபடி மேலாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த பத்து நாள் இலவச பயிற்சி தொடங்கப்பட்டது.




இந்த பயிற்சியை கல்லடை ஊராட்சி மன்ற தலைவர் ராஜலிங்கம் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் திவ்யா, பயிற்சியாளர் பிரேம்குமார் வட்டார இயக்க மேலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இதில் நிறுவனத்தின் இயக்குனர் திவ்யா பேசும்போது, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு சார்பாக மகளிர் சுய உதவி குழு பெண்கள் மற்றும் அனைத்து பொதுமக்கள் இளைஞர்கள் வளர்ச்சி அடைவதற்கு பல்வேறு திட்ட உதவிகள் அளித்து வருகிறது. இதே போல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவின் பெயரில் தோகைமலை வட்டார பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண் விவசாயிகள் உள்பட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கான காய்கறி சாகுபாடும் மேலாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த பத்து நாள் இலவச பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. 


கீழே வெளியூரில் உள்ள வறுமை ஒழிப்பு சேவை மையக் கட்டிடத்தில் நடைபெறும் பத்து நாட்கள் பயிற்சியில் செய்முறை பயிற்சிகள் கள ஆய்வு பயிற்சிகள் உள்பட மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் நர்சரி போன்ற பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கான காய்கறி சாகுபடி மேலாண்மை மற்றும் விவசாயம் சார்ந்த பயிற்சிகளை வழங்கப்பட உள்ளது.




இந்த பயிற்சியில் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளில் இருந்தும் மகளிர் சுய உதவி குழு பெண் விவசாயிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டு பயன் பெறலாம். பத்து நாட்கள் பயிற்சி முடிந்ததும் மத்திய அரசின் சான்றுகள் வழங்கப்படும். இதன் மூலம் மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பிற்கும் மற்ற விவசாயிகளுக்கும் வங்கிகளில் கடன் உதவி பெறுவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது, என்று பேசினார். இப்ப பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகளுக்கு சீருடை மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் நேரடியாக வந்து கலந்து கொள்ளுமாறும் தெரிவித்து உள்ளனர்.