கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், புத்தாம்பூர் ஆறு ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 29) என்ற இளைஞர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார்.
சொந்த ஊரான ஆறுரோடு சென்றுவிட்டு மீண்டும் வேலாயுதம்பாளையம் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அப்போது அருகில் இருந்த நபர்கள் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார், இளைஞரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை அருகே குடும்ப பிரச்சினையில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஈச்சம்பட்டிபகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 60 தொழிலாளி இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் பழனிச்சாமிக்கும் அவரது மனைவி அம்சவல்லிக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல கடந்த இரண்டாம் தேதி பழனிச்சாமி வீட்டுக்கு குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக் கொண்ட பழனிச்சாமி தோட்டத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அம்சவல்லி மற்றும் உறவினர்கள் பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாம்பு கடித்து பெண் பலி
குளித்தலையை அடுத்த வயலூர் அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு 40 விவசாயக் கூலி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா 35. இவர் கடந்த 7ஆம் தேதி மாலை 4 மணி அளவில் அய்யம்பாளையம் முருகேசன் என்பவரது சோளக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சோளத்தட்டில் இருந்த பாம்பு சசிகலா காலில் கடித்தது. இதை அடுத்து குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி மதியம் ஒரு மணி அளவில் உயிரிழந்தார். பிச்சை கண்ணு கொடுத்த புகாரின் படி லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ரயில்வே தண்டவாளம் அருகே பெயிண்டர் சடலம் மீட்பு.
கரூர் அருகே ரயில்வே தண்டவாளம் பகுதியில் கிடந்த பெயிண்டர் சடலத்தை ரயில்வே போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம், வெள்ளியணை தாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெள்ளைசாமி மகன் அன்பு செல்வன் 40 பெயிண்டர். காலை கரூர் திண்டுக்கல் ரயில்வே வழித்தடத்தில் காந்திகிராமம் தமிழ் நகர் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே காயங்களுடன் அன்புச்செல்வன் சடலம் கிடந்தது. தகவல் அறிந்த கரூர் ரயில்வே போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அன்புச்செல்வன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா ஏதேனும் உள்ளானவா கரூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். உயிரிழந்த அன்புச் செல்வனுக்கு சாரதி 36 என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.